

சொர்க்கம், நரகம் இருக்கிறதா, டிங்கு?
- சு. அஷ்வின் கார்த்திக், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
நம் வாழ்க்கை முடிந்த பிறகு, நல்ல செயல்களைச் செய்திருந்தால் சொர்க்கத்துக்கும் தீய செயல்களைச் செய்திருந்தால் நரகத்துக்கும் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் நம்பிக்கைதான். இதை யாரும் உறுதி செய்ததில்லை. நாம் உயிரோடு இருக்கும் காலத்தில் நல்ல செயல்களைச் செய்து, நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம். தீமை செய்தால் நரகம் செல்ல வேண்டும் என்கிற பயத்திலாவது தீமை செய்யாமல் இருப்பார்கள் என்று நினைத்தும் சொல்லியிருக்கலாம்.
வாழ்க்கை முடிந்த பிறகு இருப்பதாகச் சொல்லக்கூடிய சொர்க்கம், நரகம் குறித்து யோசிப்பதைவிட, வாழ்ந்துகொண்டிருக்கும்போது நல்ல விஷயங்களை யோசித்து, நல்ல செயல்களைச் செய்து, நல்லவர்களாக வாழ்ந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதுதான் சொர்க்கம் என்று நினைக்கிறேன். சொர்க்கம், நரகம் என்பது நம்பிக்கைதானே தவிர அவற்றுக்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை, அஷ்வின் கார்த்திக்.
பீட்ரூட்டுக்கும் கேரட்டுக்கும் அழகான வண்ணங்கள் எப்படி வருகின்றன, டிங்கு?
- பா. முத்துப்பேச்சி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
பீட்ரூட்டின் அடர் சிவப்பும் ஊதாவும் கலந்த கண்கவர் நிறத்துக்குக் காரணம், பீட்டாலைனில் உள்ள பீட்டாசயன் குழுவில் நிறமிகள்தாம். அதேபோல கேரட்டுக்கு ஆரஞ்சு வண்ணத்தைக் கொடுப்பவை பீட்டா கரோட்டின் நிறமிகள்தாம், முத்துப்பேச்சி.