

“அந்த ஓலைய எல்லாம் நல்லா வெட்டுப்பா. முத்தின தேங்காய்களை மட்டும் பறிச்சிப் போடுப்பா” என்று மரம் ஏறியவரிடம் உரக்கக் சொல்லிக்கொண்டிருந்தார் தாத்தா.
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த முகுந்தனுக்குத் தாகம் எடுத்தது. வேகமாக வீட்டுக்கு ஓடிவந்தான்.
“முகுந்தா, இங்க வா. இளநீர் குடிக்கிறீயா, உடம்புக்கு நல்லது” என்று கேட்டார் தாத்தா.
“ஆஹா! டம்ளர் எடுத்துட்டு வரேன் தாத்தா” என்று வீட்டுக்குள் ஓடினான் முகுந்தன்.
தென்னை மரத்தில் இருந்து தேங்காய்களைப் பறித்துப் போடுவதும் குருத்துகளைச் சுத்தம் செய்வதுமாக இருந்தார் மரத்தில் ஏறியவர்.
அப்போது பொத்தென்ற சத்தத்தோடு ஏதோ ஒன்று இவர்களின் அருகே விழுந்தது.
“தாத்தா, இங்க பாருங்க. இது குருவியோட கூடுனு நினைக்கிறேன்” என்று பதற்றத்தோடு கூட்டைக் கையில் எடுத்துத் தாத்தாவிடம் நீட்டினான் முகுந்தன்.
“அச்சச்சோ, இது குருவிக்கூடு இல்ல முகுந்தா, அணில்கூடு” என்றார் தாத்தா.
“ஓ... இது அணில்கூடா? நல்லவேளை, இதுல அணில் குஞ்சு எதுவும் இல்ல” என்று முகுந்தன் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
தாத்தாவும் முகுந்தனும் திரும்பிப் பார்த்தனர்.
“தாத்தா, இங்க பாருங்களேன் ரெண்டு அணில் குஞ்சுகள் இங்க கத்திக்கிட்டு இருக்கு” என்று சொல்லிக்கொண்டே அவற்றின் அருகில் சென்றான் முகுந்தன்.
“ரெண்டையும் பார்க்கப் பாவமா இருக்கு தாத்தா. இந்தக் குஞ்சுகளை நாமளே எடுத்து வளர்க்கலாமா” என்று தாத்தாவிடம் கேட்டான் முகுந்தன்.
“வேண்டாம் முகுந்தா,கண்கூடத் திறக்கல இதுங்களுக்கு. அம்மாகிட்ட தான் இதுங்க இப்ப இருக்கணும். இதுங்களோட அம்மா வந்து தேடும்” என்றார் தாத்தா.
“இதுங்களுக்கும் பசிக்குமில்ல. இதோட அம்மா எங்கே போனதோ, எப்ப வந்து உணவு கொடுக்குமோ?" என்று வருத்தத்துடன் சொன்னான் முகுந்தன்.
“நீ வருத்தப்படுறது எனக்குப் புரியுது முகுந்தா. நான் ஒரு கேள்வி கேட்கறேன் பதில் சொல்றியா?"
“ம்... கேளுங்க" என்று தலையாட்டினான் முகுந்தன்.
“பள்ளியிலிருந்து வந்த உடனே நீ யாரைத் தேடுவே?"
“நான்... அம்மாவைத்தான் தேடுவேன்."
“ஏன்?”
“ஏன்னா, நான் ரொம்ப நேரமா அம்மாவைப் பார்க்கல. அம்மாகிட்ட சொல்றதுக்கு எனக்கு நிறைய விஷயம் இருக்கும். எனக்குப் பசிக்கும். இப்படி நிறைய காரணங்கள் இருக்கு தாத்தா.”
“நீ இவ்ளோ பெரிய பையனாயிட்ட, உனக்கே அம்மா தேவைப்படும்போது, இங்க பாரு கண்ணுகூடத் திறக்கல. அப்போ இதுங்களுக்கு அம்மா வேணாமா நீயே சொல்லு” என்றார் தாத்தா.
“தாத்தா, நான் பால் எல்லாம் கொடுத்து, பத்திரமா பார்த்துக்கறேன்.”
“நான் உனக்குச் சாப்பாடு கொடுக்கறேன். உங்க அம்மாவை வெளியூருக்கு அனுப்பி வைக்கட்டுமா?”
“அம்மா இல்லாமல் நான் இருக்க மாட்டேன்.”
“அதே மாதிரிதான், அணில் குஞ்சுகளுக்கும் உணவு தவிர மத்த விஷயங்களுக்கும் அம்மா தேவை. அம்மாவும் தன்னோட குழந்தைகளைத் தேடாதா? பாவம் இல்லையா முகுந்தா?”
அமைதியாக நின்றுகொண்டிருந்த முகுந்தனின் கையில் இருந்த இரண்டு அணில் குஞ்சுகளையும் வாங்கி, கூடுக்குள் வைத்து, “இதை அந்தத் தென்னை மரத்துக்குக் கீழே வச்சிட்டு வா” என்று கொடுத்தார் தாத்தா.
சில நிமிடங்களில் தென்னை மரத்திலிருந்து கீழ் நோக்கிக் கத்திக்கொண்டே ஓடிவந்தது அம்மா அணில்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஓர் அணில் குஞ்சை வாயில் கவ்வியபடி பக்கத்துத் தென்னை மரத்தில் ஏறியது.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த முகுந்தன், “தாத்தா... தாத்தா...” என்று ரகசியமாகஅழைத்தான்.
“சத்தம் போடாதே அமைதியாகப் பார்.”
சிறிது நேரத்தில் மீண்டும் அம்மா அணில் வந்து, மற்றோர் அணில் குஞ்சையும் கவ்விக்கொண்டு சென்றது.
தாத்தாவைப் பார்த்தான் முகுந்தன்.
“இப்பச் சொல்லு முகுந்தா, நீ இந்த அணில் குஞ்சுகளை வளர்க்கப் போறேன்னு வீட்டுக்குள்ள வச்சிருந்தா, இதுங்களோட அம்மா தேடிக்கிட்டேதானே இருந்திருக்கும்... பாவம் தானே?” என்றார் தாத்தா.
“ஆமாம் தாத்தா, நீங்க சொன்னது சரிதான்” என்றான் முகுந்தன்.
“முகுந்தா, நேரமாச்சு... நீ பசி தாங்கமாட்டே... வா சாப்பிடலாம்” என்று அழைத்தார் அம்மா.
புன்னகையுடன் தாத்தாவைப் பார்த்துவிட்டு ஓடிப்போய், அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டான் முகுந்தன்.