

பல வருடங்களுக்கு முன்பு இந்த உலகம் முழுவதும் காடுகளாகத் தான் இருந்தன. எல்லா விலங்குகளும் காட்டில் முரட்டுத் தனமாகவே திரிந்தன. நாய், குதிரை, மாடு, ஆடு எல்லாமே அப்படித்தான் இருந்தன. இருப்பதிலேயே பூனை மிகவும் முரட்டுத்தனமாக இருந்தது. தன் விருப்பம்போல் நடக்கும் பூனை, காட்டில் தான் விரும்பியதை எல்லாம் செய்து, விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தது.
மனிதர்களும்கூடக் காட்டில்தான் வாழ்ந்தார்கள். விலங்குகளைப் போலவே ஈரத்தரையில் படுத்தும் சமைக்காத உணவை உண்டும் வாழ்ந்தார்கள். அங்கிருந்த ஒரு பெண் முதன் முதலில் குகையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். மணலைக் கொண்டுவந்து கொட்டி, குகைத் தரையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
காய்ந்த இலைகளைப் பரப்பி தூங்குவதற்கு மெத்தை தயாரித்தார். குதிரையின் தோலைக் குகை வாசலில் திரை போலத் தொங்கவிட்டார். குளிர் காற்று உள்ளே வராமல் அது தடுத்தது. விறகுகளைக் காய வைத்து நெருப்பு மூட்டி கதகதப்பாக வைத்துக்கொண்டார்.
காட்டில் திரியும் செம்மறியாட்டுக் கறியை நெருப்பில் சுட்டு, காட்டுப் பூண்டும் காட்டு மிளகும் தடவிச் சமைத்தார். ஒருநாள் நெருப்பின் முன் அமர்ந்து, ஒரு மந்திரப் பாடலைப் பாடினார். அப்போது ஏற்பட்ட வெளிச்சத்தைப் பார்த்து காட்டு நாய் வந்தது. பூனையையும் வரச் சொல்லிக் கூப்பிட்டது.
“என் விருப்பம்போல் நடக்கும் பூனை நான். இந்தக் காடே என்னுடையதுதான். நான் எங்கே விரும்பினாலும் போவேன், வருவேன். இந்த மனிதர்களைப் பார்க்க நான் வரவில்லை” என்று சொன்னது பூனை. நாய் மட்டும் சென்றது. பூனை யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி பின்தொடர்ந்து சென்றது. காட்டு நாய்க்கு நெருப்பில் சுட்ட எலும்பின் வாசம் வழிகாட்டியது. குகையில் இருந்த பெண்ணிடம், “இதை எனக்குச் சாப்பிடக் கொடுப்பாயா?” என்று கேட்டது.
அவரும் ஓர் எலும்பை எடுத்துப் போட்டார். அதைச் சுவைத்த நாய், இதுவரை தான் சாப்பிட்ட எதுவுமே இவ்வளவு சுவையாக இருந்ததில்லை என்று நினைத்தது. எனவே, அந்தப் பெண்ணிடம், “இன்னொன்று கிடைக்குமா?” என்று கேட்டது. அந்தப் பெண், “கண்டிப்பாகத் தருகிறேன். தினமும் தருகிறேன்.
ஆனால், நீ ஆணுடன் சென்று வேட்டைக்கு உதவியாக இருக்க வேண்டும். குகையில் வேறு யாரும் வராமல் காவல் காக்க வேண்டும். சம்மதமா?” என்று கேட்டார்.
காட்டு நாய் அதற்கு ஒப்புக்கொண்டு வீட்டு நாயாக மாறிவிட்டது. இதை எல்லாம் மறைவில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பூனை, “இந்தப் பெண் புத்திசாலிதான். அவரைவிட நான் புத்திசாலி. என் விருப்பம்போல் நடக்கும் பூனை நான். இந்தக் காடே என்னுடையதுதான்.
நான் எங்கே விரும்பினாலும் போவேன், வருவேன். இந்த மனிதர்கள் பேச்சில் நான் மயங்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போனது. இன்னும் இரண்டு மந்திரப் பாடலை உருவாக்கி, காட்டுக் குதிரையைப் பயணம் செய்யவும், காட்டு மாட்டைப் பால் கறக்கவும் பயன்படுத்தினார் அந்தப் பெண்.
அவர் மூன்று வேளை கொடுக்கும் புல்லைத் தின்று, வீட்டு விலங்குகளாக அவை மாறிவிட்டன. இதைப் பார்த்த பூனை தானும் இந்த வசதிகளை அனுபவிக்க நினைத்தது. அந்தப் பெண் இந்தப் பூனையைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
நான் உன்னிடம் மூன்று முறை பாராட்டு வாங்கினால் சேர்த்துக் கொள்வாயா என்று கேட்டது தன் விருப்பம்போல் நடக்கும் புத்திசாலிப் பூனை. அதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்து சம்மதம் சொன்னார் அந்தப் பெண். வெகுநாள் கழித்து வந்த பூனை, அந்தக் குகையில் புதிதாகக் குழந்தை ஒன்று இருப்பதைப் பார்த்தது.
வேலை செய்யும் பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த குழந்தையைத் தன் வாலில் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தது பூனை. நூல்கண்டு வைத்து குழந்தையுடன் விளையாடி, தன் கதகதப்பான உடல்மேல் தூங்கவைத்தது. அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவாக இருந்த சுண்டெலியைப் பிடிக்க உதவியது. இந்த மூன்று உதவிகளுக்கும் மூன்று முறை பாராட்டினார் அந்தப் பெண்.
அன்றிலிருந்து விரும்பும் நேரத்தில் குகைக்குள் வருவது, அடுப்பின் அருகில் படுப்பது, பால் குடிப்பது ஆகிய மூன்று சலுகைகளைப் பெற்றது பூனை. ஆணும் நாயும் மாலையில் குகைக்கு வந்தபோது திகைத்தனர். “எல்லாச் சுண்டெலிகளையும் பிடித்தால் உன்னை இங்கே வர அனுமதிப்பேன். இல்லை என்றால் அடித்து விரட்டுவேன்” என்றார் ஆண்.
“குழந்தையிடம் எப்போதும் அன்பாக இருந்தால் போதும். இல்லையென்றால் உன்னை விரட்டிக் கடிப்பேன்” என்றது நாய். இதைக் கேட்ட பூனை, “எல்லாச் சுண்டெலிகளையும் பிடிக்க முடியாது. சில தப்பித்துவிடும். குழந்தை என் வாலைப் பிடித்து வலிக்கும்படி இழுக்காதவரை அன்பாகத்தான் இருப்பேன்” என்று பதில் சொன்னது.
உடனே ஆணும் நாயும் சேர்ந்து பூனையை விரட்டத் தொடங்கினார்கள். அவர்கள் கையில் சிக்காமல் ஓடி மறைந்தது பூனை. இப்போதும் இந்த விரட்டல் தொடர்கிறது. ஆனால், அந்தப் பெண்ணும் பூனையும் ஒப்பந்தத்தை இன்றும் மதிக்கிறார்கள். வீட்டுக்கு வரும் பூனையை விரட்டாமல் கிண்ணத்தில் பால் வைக்கிறார் அந்தப் பெண். முடிந்தவரை சுண்டெலிகளைப் பிடித்து, குழந்தையுடன் விளையாடுகிறது தன் விருப்பம்போல் நடக்கும் பூனை!
- தமிழில்: கோகிலா