

இ
ந்தியாவின் மிகச் சிறியதும் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதுமான மாநிலம் கோவா. 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களிடமிருந்த கோவா விஜய நகர மன்னர்களின் வசம் வந்தது. 1510-ல் வணிகத்துக்காக வந்த போர்த்துகீசியர்கள் பிஜப்பூர் மன்னரைத் தோற்கடித்து கோவாவைக் கைப்பற்றினர். நீண்ட காலம் கோவா அவர்கள் வசம் இருந்ததால், மக்களின் வாழ்க்கை முறை, இசை, நடனம், கலை,கட்டிடக்கலை, மதம், மொழி, இலக்கியம், சமையல் போன்ற அனைத்திலும் போர்த்துகீசியர்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது.
அழகிய கடற்கரைகளும் புகழ்பெற்ற தேவாலயங்களும் கோவாவின் அடையாளங்கள். உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுதும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
வட கோவாவிலும் தென் கோவாவிலும் ஏராளமான கடற்கரைகள் இருக்கின்றன. சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் கடற்கரையில் இருந்து பார்க்கும்போது, அற்புதமாக இருக்கும். சில கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் இந்தக் கடற்கரைகளில் மணல் சிற்பத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. உலகின் பல நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
கல்கிபாகா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யவருகின்றன. கடலில் இருந்து ஆமைகள் வருவதும் கடற்கரை மணலில் முட்டைகளை இட்டுச் செல்வதையும் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும். சில கடற்கரைகளில் கம்பீரமாக இருக்கும் கோட்டைகளைப் பார்ப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கோவாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று பசிலிகா டி பாம் ஜீஸஸ் எனப்படும் தேவாலயம். இந்தியாவின் மிகவும் பழமையான தேவாலயமாக இது கருதப்படுகிறது. கி.பி. 1552-ம் ஆண்டு மறைந்த செயின்ட் பிரான்சிஸ் சேவியர் என்ற புனிதரின் உடல் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
சே கதீட்ரல் தேவாலயம் புனித கேத்தரீன் அவர்களுக்கான நினைவுச் சின்னமாக உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேவாலயமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களும் மிகப் பெரிய மணியும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்கின்றன.