

அப்பா தின்பண்டங்களை வாங்கிவரும் போதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான்.
“நீங்க டிட்டோவுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கறீங்க” என்றார் அம்மா.
அப்பாவுக்கு அம்மா சொல்லும் விஷயம் புரிந்தாலும் அமைதியாக இருந்தார்.
“அவனுக்கு மட்டும் ஏன் ரெண்டு லட்டு கொடுத்தீங்க?”
“சின்னப் பிள்ளையா இருக்கும்போதே நாமதானே பழக்கிவிட்டோம்?”
“அது சாம் பிறக்கிறவரைக்கும் சரி. இப்பவும் அப்படியே நடந்துக்கணுமா?”
“பழக்கத்தை உடனே மாத்த முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாத்தணும்.”
“சரிதான். டிட்டோ ரொம்ப காலம் கழிச்சுப் பிறந்தவன். அதனால நாம ரெண்டு பேருமே அவன்மேல பாசத்தைக் கொட்டி வளர்த்தோம். டிட்டோ பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சு சாம் பிறந்ததுக்கு அப்புறம், ரெண்டு பேரையும் சமமாகப் பார்க்கறதுதானே நியாயம்?”
“இதைத் தவிர எல்லாத்துலயும் ரெண்டு பேரையும் சமமாகத்தானே நடத்தறேன்?”
“அப்புறம் ஏன் டிட்டோவுக்கு மட்டும் ரெண்டு லட்டைக் கொடுத்திருக்கீங்க? சாமுக்கும் ரெண்டு லட்டைக் கொடுக்கலாமே?”
“டிட்டோ கோவிச்சுக்குவான். அப்புறம் அவன் நாலு லட்டு கேட்பான்” என்று சிரித்தார் அப்பா.
முன்னறையில் டிட்டோவும் சாமும் லட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
டிட்டோ ஒரு லட்டை வேகமாகச் சாப்பிட்டு முடித்தான். இன்னொரு லட்டை சாமுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டான். சாம் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு லட்டை மெதுவாகச் சாப்பிட்டான்.
“ஒரு லட்டை எவ்வளவு நேரம் சாப்பிடுவே? நான் ரெண்டு லட்டையும் எவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுட்டேன்னு பார்த்தீயா?” என்று சாமைப் பார்த்துக் கேட்டான் டிட்டோ.
சாம் எந்த உணவையும் மெதுவாகத்தான் உண்பான். ருசித்துச் சாப்பிடுவான்.
“மெதுவாக மென்று சாப்பிட்டால்தான்
சீக்கிரம் ஜீரணம் ஆகும்னு அம்மா சொன்னது உனக்கு மறந்து போச்சா? உன் லட்டை யாரும் தட்டிப்பறிக்கப் போறாங்களா?” என்று டிட்டோவைப் பார்த்துக் கேட்டான் சாம்.
சாம் லட்டைச் சாப்பிட்டு முடித்ததும் தன்னிடமிருந்த லட்டை எடுத்துக் காட்டினான் டிட்டோ.
“இங்க பாரு இன்னொரு லட்டு” என்று சிரித்தான் டிட்டோ.
“உனக்கு இதில் சந்தோஷம் கிடைக்குதுன்னா எனக்கும் சந்தோஷம்தான்” என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்றான் சாம்.
“இப்படித்தான் ஒவ்வொரு நாளும் டிட்டோ செய்றான். நானும் எவ்வளவோ கண்டிச்சுப் பார்த்துட்டேன். கேட்க மாட்டேங்கறான்” என்று வருத்தப்பட்டார் அம்மா.
“ஐயோ... இது என்ன பழக்கம்? டிட்டோ ஏன் இவ்வளவு மோசமா சாம் கிட்ட நடந்துக்கறான்?”
“இப்பதான் உங்களுக்குப் புரியுதா?”
“இது டிட்டோவுக்கும் நல்லதல்ல, சாமுக்கும் நல்லதல்ல. ஏதாவது செய்யணும்.”
மறுநாள் மூன்று சாக்லெட்டுகளை வாங்கிவந்தார் அப்பா. இருவருக்கும் கொடுத்தார். டிட்டோவுக்கு இரண்டு. சாமுக்கு ஒன்று.
அப்பாவிடமிருந்து சாக்லெட்டை வாங்கும்போதே சாமின் மனதில் ஒரு திட்டம் உருவானது. சாக்லெட்டைப் பிரித்து வாய்க்குள் போடுவதுபோல் நடித்து, பின் அதை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான். சுவைத்துச் சாப்பிடுவதுபோல் நடித்தான்.
டிட்டோவும் எப்போதும்போல் மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை வேகமாக எடுத்துக் காட்டினான். வெற்றிப் புன்னகையோடு அந்த சாக்லெட்டைச் சுவைத்தான்.
டிட்டோ சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்த சாம், தான் மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை வெளியே எடுத்தான். டிட்டோவிடம் காட்டினான்.
“இன்னைக்கு நீ ஏமாந்தியா?” கேலியாகச் சிரித்தபடிக் கேட்டான் சாம்.
டிட்டோவின் முகம் சுருங்கியது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. சாம் அண்ணனைக் கவனித்தான். பாவமாக இருந்தது. சாக்லெட்டை இரண்டாக உடைத்து பாதியை டிட்டோவிடம் நீட்டினான்.
அதிர்ச்சியடைந்த டிட்டோ, தம்பியிடம் இருக்கும் பெருந்தன்மை ஏன் தன்னிடம் இல்லை என்று யோசித்தான். தன் தவறு புரிந்தது.
“என்னை மன்னிச்சிரு சாம். இனி இப்படிச் செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, தம்பியைக் கட்டிக்கொண்டான்.
அம்மாவும் அப்பாவும் இந்தக் காட்சியைப் பார்த்து நெகிழ்ந்தனர்.
“அப்பா, இனி எனக்கும் சாமுக்கும் ஒரே அளவு தின்பண்டம் கொடுங்க” என்று சிரித்த டிட்டோவின் முதுகில் தட்டிக்கொடுத்தார் அப்பா.
அம்மாவுக்கும் சாமுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.