

முல்லைக்காட்டில் வசித்த குரங்கும் மானும் முயலும் நண்பர்கள். ஒருநாள் ஒட்டகச்சிவிங்கியை அழைத்துக்கொண்டு மானும் முயலும் குரங்கிடம் வந்தன.
“இவன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். நம் காடு குறித்து எதுவும் தெரியாது. இவனை நம் நண்பனாகச் சேர்த்துக்கொள்ளலாமா?” என்று கேட்டது மான்.
குரங்கு நிமிர்ந்து பார்த்தது. ஒட்டகச்சிவிங்கியின் உயரம் அதற்கு விநோதமாகத் தெரிந்தது. “நம் நட்பு வட்டத்தில் புதிதாக யாராவது வந்தால் குழப்பம் வரும். அதனால், ஒட்டகச்சிவிங்கியைச் சேர்த்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை” என்றது குரங்கு.
“ஒட்டகச்சிவிங்கி சாதுவானவன். நம் காட்டிலேயே அவன்தான் உயரமாக இருக்கிறான். அவன் நம்மோடு இருந்தால், நமக்குதான் நல்லது” என்றது முயல்.
“உயரமாக இருப்பதாலேயே ஒருவர் நல்லவராகிவிட முடியுமா? அவனுக்கு என்னைப் போல மரம் ஏறத் தெரியுமா? உன்னைப் போல், மானைப் போல் வேகமாக ஓட முடியுமா? அவனால் தரையில்தானே நடக்க முடியும்? யார் உதவியும் நமக்குத் தேவையே இல்லை” என்று அலட்சியமாகச் சொன்னது குரங்கு.
புதிதாக யாரையுமே அருகில் நெருங்கவிடாத குரங்கின் இயல்பு குறித்து மானும் முயலும் அறிந்திருந்ததால், அமைதியாக இருந்தன. ஒட்டகச்சி விங்கி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.
சில மாதங்களில் வெயில் கடுமையாக இருந்தது. மரங்களில் பழங்கள் எதுவும் இல்லை. குரங்கும் மானும் முயலும் சேர்ந்து உணவைத் தேடிச் சென்றன. சற்றுத் தொலைவில் பசுமை தெரிந்ததும் மூன்றும் மகிழ்ச்சியடைந்தன.
“அங்கே நமக்கு உணவு கிடைக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள் போவோம்” என்று மான் சொல்ல, குரங்கும் முயலும் வேகமாகச் சென்றன.
செடிகள் உயரமாக இருந்தன. அவற்றின் உச்சியில் சிவப்புப் பழங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால், செடி முழுவதும் நீண்ட, கூர்மையான முள்கள் காணப்பட்டன.
“என்ன செடி இது? இவ்வளவு பழங்கள் இருந்தும் நம்மால் பறிக்க முடியாதே... முள்ளைக் கண்டால் பயமாக இருக்கிறது” என்றது குரங்கு.
“நண்பா, இவை கள்ளிச் செடிகள். கள்ளிப் பழங்கள் சுவையாக இருக்கும். தானாக உதிர்ந்து கிடந்த பழங்களை ஒருமுறை சாப்பிட்டிருக்கிறேன். நம்மால் இந்தப் பழங்களைப் பறிக்க முடியாது. வேறு எங்கேனும் உணவு கிடைக்குமா என்று பார்க்கலாம்” என்றது மான்.
“இந்தச் செடிகளில் ஏன் இவ்வளவு முள்கள்?”
“நண்பா, இவை வறட்சியான இடங்களில் வளரக்கூடியவை. நீர்ச்சத்து மிகுந்தவை. அதனால், தாகத்தோடும் பசியோடும் வரும் ஆடு, மாடுகள் இவற்றைத் தின்றுவிடக் கூடாது என்று இயற்கையே இவற்றுக்குக் கொடுத்திருக்கும் பாதுகாப்புதான் இந்த முள்கள்.”
“கள்ளிச்செடியின் பழங்கள் ருசியானவை என்று இருவருமே சொல்கிறீர்கள். ஆனால், உச்சியில் கிடக்கும் பழங்களை எப்படிப் பறிப்பது? மற்ற மரங்களாக இருந்தால் நானே பறித்திருப்பேன். இதில் ஏற முடியாதே...” என்று வருத்தப்பட்டது குரங்கு.
“நண்பா, கள்ளிப் பழங்களைச் சாப்பிட ஒரு வழிதான் இருக்கிறது. ஆனால்?”
“என்ன ஆனால்? இப்போதிருக்கும் பசிக்கு என்ன யோசனை சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன்.”
“இதோ இப்போதே வருகிறேன்” என்று ஓடிச் சென்ற முயல், ஒட்டகச்சிவிங்கியை அழைத்து வந்தது.
கள்ளிச்செடிகளின் உச்சியில் பழுத்துக் கிடந்த பழங்களைக் கடித்துக் கீழே போட்டது ஒட்டகச்சிவிங்கி. குரங்கும் மானும் முயலும் கள்ளிப் பழங்களைச் சாப்பிட்டன.
“ஒட்டகச்சிவிங்கியே, கள்ளிப் பழங்களைக் கடிக்கும்போது உன் நாக்கில் முள்கள் குத்தவில்லையா?” என்று கேட்டது குரங்கு.
“என் நாக்கு மிகவும் தடிமனானது. எவ்வளவு கடினமான முள்களையும் என்னால் மென்று சாப்பிட முடியும். அதனால் எனக்கு முள்களைப் பற்றிய அச்சமில்லை” என்று சொன்னபடியே ஒட்டகச்சிவிங்கி மேலும் சில கள்ளிப் பழங்களைக் கடித்துப் போட்டது.
கள்ளிப் பழங்களைத் தின்று பசியும் தாகமும் அடங்கிய குரங்கு, “ஒட்டகச்சிவிங்கியே, என்னை மன்னித்துவிடு. என்னால் மரம் ஏற முடியும் என்கிற ஆணவத்தில் அன்று அப்படிப் பேசிவிட்டேன். ஆனால், இது போன்ற முள்கள் நிறைந்த மரம், செடிகளும் உண்டு என்று யோசிக்கவில்லை. இன்று நீதான் எங்கள் பசியைத் தீர்த்து வைத்தாய். உனக்கு எங்களின் நன்றி. நீயும் எங்கள் நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டாய்” என்றது குரங்கு.
“நண்பர்கள் அதிகரித்தால் எதிரிகள் விலகிவிடுவார்கள். ஒட்டகச்சிவிங்கியை நட்பு கொண்டதால் இப்போது நம் பசி எனும் எதிரி விலகிவிட்டான் அல்லவா! நண்பர்களால் நிச்சயம் நன்மைதான் அடைவோம்” என்று குரங்கிடம் மான் சொன்னது.
“நீங்கள் இருவரும் சொல்வது உண்மை என்று புரிந்துகொண்டேன். இனி ஒட்டகச்சிவிங்கியும் நம் நண்பன்தான்” என்றது குரங்கு.
நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் ஒட்டகச்சிவிங்கி அவர்களுடன் சென்றது.