

தென்கொரியாவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச ஓவியப் போட்டியில் ‘தங்கப் பதக்கம்’ பெற்றுத் திரும்பியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹன்னா சில்வியா.
தென்கொரியா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் கலை, கலாச்சாரம் போன்றவற்றில் நெருங்கிய தொடர்பைக்கொண்டுள்ளன. எனவே, இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி தென்கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்றது.
‘கே-ஆர்ட் இன்டர்நேஷனல் இளம் வயதினருக்கான ஓவியப் போட்டி’ ஆகஸ்ட் 3 முதல் 10 வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா, தென்கொரியா, ஜப்பானைச் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இவர்களில் சிறந்த ஓவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிப் போட்டியில் பங்கேற்க தென்கொரியா சென்றனர்.
அவர்களில் சென்னை துரைப்பாக்கத்தில் ஏபிஎல் குளோபல் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவரும் ஹன்னா சில்வியாவின் ஓவியம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ‘சுற்றுச்சூழலும் மனிதனும்’ என்கிற கருப்பொருளில் ஹன்னா சில்வியா இந்த ஓவியத்தைத் தீட்டியிருந்தார். “இது ஓவியப் போட்டி மட்டுமல்ல, மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் எங்களின் சிந்தனைகளைப் பரிமாறிக்கொண்டோம். பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். மிக அருமையான பயணமாக இருந்தது” என்கிறார் ஹன்னா சில்வியா.