

பிகுள் புத்திசாலி. எல்லாரையும் நேசிக்கக்கூடியவள். அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோதே அவளுடைய அம்மா இறந்துவிட்டார். அதனால் உறவுக்காரர் அனோங் பராமரிப்பில் வளர்ந்தாள். அந்த உறவுக்காரருக்கு மாலி என்கிற ஒரு மகள் இருந்தாள். மாலிக்கும் பிகுளுக்கும் ஒரே வயதுதான். ஆனால், இரண்டு பேரையும் ஒரே விதமாக நடத்த மாட்டார் அனோங்.
ஒருநாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள் பிகுள். அனோங் அவளை அழைத்து, ஒரு பெரிய குடத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். பிகுள் பெரிய குடத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தாள்.
வழியில் ஒரு பாட்டி குடிக்கத் தண்ணீர் கேட்டார். உடனே மிகுந்த அன்போடு குடத்திலிருந்த தண்ணீரை அந்தப் பாட்டிக்குக் கொடுத்தாள் பிகுள். தாகத்தைத் தீர்த்துக்கொண்ட பாட்டி, பிகுளுக்கு நன்றி சொன்னார்.
“இந்தத் தண்ணீரை உங்கள் பானையில் ஊற்றிவிடுகிறேன். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றாள் பிகுள்.
“இருக்கிற தண்ணீரைக் கொடுத்தால், நீ திரும்பவும் போய்த் தண்ணீர் எடுக்க வேண்டி வருமே” என்றார் பாட்டி.
“பரவாயில்லை. நான் திரும்பப் போய்த் தண்ணீர் எடுத்துக்கொள்கிறேன்.”
“நீ இரக்கக் குணமுள்ளவள். எனக்கு நீ அன்பு காட்டி இருக்கிறாய். இனி நீ யாருக்கு அன்பு காட்டுகிறாயோ, அப்போதெல்லாம் உன் வாயிலிருந்து தங்கப் பூக்கள் கொட்டும். இனி உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உன் உதவிக்கு நன்றி” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று அந்தப் பாட்டி மறைந்தார்.
பாட்டி சாதாரணமான மனிதரில்லை என்பதை உணர்ந்துகொண்டாள் பிகுள். அவள் வீட்டிற்குத் திரும்பியபோது அனோங் கோபமாக இருந்தார்.
“ஒரு குடம் தண்ணீர் எடுத்து வரச் சொன்னால், இவ்வளவு நேரமா? உன் வேலையையும் நானே செய்ய வேண்டுமா?” என்று கேட்டார் அனோங்.
“ஐயோ, நீங்கள் உடல்நலம் குன்றியவர். என் வேலையை நீங்கள் செய்ய நான் விரும்ப மாட்டேன். வழியில் ஒரு பாட்டி தண்ணீர் கேட்டார். அதான் தாமதமாகிவிட்டது” என்று நடந்ததைச் சொன்னாள் பிகுள். அப்போது பிகுளின் வாயிலிருந்து தங்கப் பூக்கள் உதிர்ந்தன. அதைக் கண்ட அனோங், ஆச்சரியத்தில் கண் இமைக்க மறந்தார்.
அன்று முதல் பிகுளுக்கு வேலை அதிகம் கொடுப்பதில்லை. அன்பாகப் பேசிப் பேசி, பிகுளின் வாயிலிருந்து தங்கப் பூக்களை எடுத்துக்கொண்டார். அவற்றைச் சந்தையில் விற்று, பணத்தைச் சேமித்தார்.
தினமும் தங்கப் பூக்களை வரவழைத்ததால், பிகுளின் குரல் வளம் மோசமானது. தங்கப் பூக்களின் எண்ணிக்கையும் குறைந்தது. அதிகமான தங்கப் பூக்கள் வேண்டும் என்று பிகுளைத் துன்புறுத்த ஆரம்பித்தார் அனோங். ஆனால், தன்னால் வரவழைக்க இயலாது என்று கூறிவிட்டாள் பிகுள்.
உடனே தன் மகள் மாலியை, அந்தப் பாட்டி இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்தார் அனோங்.
பிகுள் பாட்டியைச் சந்தித்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள் மாலி. அங்கே ஒரு பாட்டி விலை உயர்ந்த ஆடையையும் நகைகளையும் அணிந்துகொண்டு அமர்ந்திருந்தார். அவர் மாலியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.
’பாட்டி கந்தல் துணியில் இருந்ததாகத்தானே பிகுள் சொன்னாள். அப்படி என்றால், இவர் அந்தப் பாட்டி அல்ல’ என்று நினைத்த மாலி, “நான் ஏன் உங்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும்? அதனால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது? நான் ஒரு பாட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என்று அவரை விரட்டிவிட்டாள்.
உடனே அந்தப் பாட்டி, “நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ, அப்போதெல்லாம் உன் வாயிலிருந்து மண் வரும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
வீட்டிற்குத் திரும்பிய மாலி, நடந்ததை அனோங்கிடம் அழுதுகொண்டே சொன்னாள். அவள் வாயிலிருந்து மண் கொட்டியது.
“பிகுள், இது உன் வேலைதானே? நீதானே தவறான தகவல்களைத் தந்தாய்? இனி உனக்கு இங்கே இடமில்லை. வெளியே போ” என்று கோபத்துடன் பிகுளை அனுப்பிவிட்டார் அனோங்.
பிகுள் காட்டு வழியில் தனியாக அழுதுகொண்டே சென்றாள். அப்போது அந்த வழியே வந்த மன்னர், “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்.
பிகுள் நடந்ததைச் சொன்னபோது, மீண்டும் அவள் வாயிலிருந்து தங்கப் பூக்கள் கொட்டின. ஆச்சரியமடைந்த மன்னர், பிகுளைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். தன் மகளாக அறிவித்தார். ஓர் இளவரசியாக, மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தாள் பிகுள்.