

மி
கெல் மெக்சிகோவில் வசித்துவருகிறான். காலணிகள் தயாரிப்பதுதான் அவர்களது குடும்பத் தொழில். ஆனால், மிகெலுக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம். பிரச்சினை என்னவென்றால், மிகெல்லின் குடும்பத்தில் ‘இசை, பாட்டு’ போன்ற வார்த்தைகளையே உச்சரிக்கக் கூடாது என்ற அளவுக்கு நீண்ட காலமாகத் தடை இருந்துவருகிறது. மார்க்கெட்டில் யாரோ ஒருவர் பாடுவதைக் கூட, மிகெல்லின் பாட்டியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் விரட்டுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
மிகெல்லுக்குப் பிரபல மெக்சிகன் இசையமைப்பாளரான எர்னஸ்டோவைப்போலவே பாடகராகவும் கிதார் இசைக் கலைஞராகவும் ஆகவேண்டுமென்று ஆசை. அதனால், யாருக்கும் தெரியாமல் ஒரு கிதார் வாங்கி, பயிற்சி செய்துவருகிறான். இவனது உற்றத் தோழன் ’டான்டே’ என்ற நாய். எங்கே சென்றாலும் இவனைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கும்!
மெக்சிகோவில் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நாள் ஒன்று உண்டு. இதை ‘Day of the Dead’ என்று அழைப்பார்கள். நமது உலகுக்கும் இறந்தவர்களின் உலகுக்கும் இடையே ஒரு பாலம் இருக்கிறது. முன்னோர்களின் தினத்தன்று அவர்களின் கல்லறையில் பூக்களை வைத்து அன்புடன் நினைவு கூர்ந்தால், அவர்கள் அந்தப் பாலத்தைக் கடந்து நம் உலகுக்கு வரமுடியும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.
அப்படி ஒரு முன்னோர்களுக்கான தினத்தில் மிகெல்லின் பாட்டியின் பாட்டியான கோகோ வீட்டுக்குவருகிறார். அப்போது பழைய படத்தில் ஒருவரது தலை கிழிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான் மிகெல். அவர் அவனது தாத்தாவுக்கும் தாத்தா என்பதையும், அவர்தான் பிரபல இசைக்கலைஞர் எர்னஸ்டோ என்பதையும் கண்டுபிடிக்கிறான்.
அதே நேரத்தில், மிகெல்லின் கிதாரை அவனது குடும்பத்தினர் கண்டுபிடித்து, உடைத்துவிடுகிறார்கள். கோபத்துடன் வெளியேறும் மிகெல், எர்னஸ்டோவின் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறான். அங்கே ஒரு பாலத்தில் ஏறி, இறந்தவர்களின் உலகுக்குச் சென்றுவிடுகிறான். அவனுடனே டான்டேவும் நுழைந்துவிடுகிறது. அங்கே, ஹெக்டார் என்பவரின் உதவியுடன் தனது மூதாதையரான எர்னஸ்டோவைத் தேடுகிறான்.
முன்னோர்களின் தினம் ஒரே ஒருநாள் மட்டும் கடைபிடிக்கப்படுவதால், விடிவதற்குள்ளாக அவன் மறுபடியும் பாலத்தைக் கடந்து, நமது உலகுக்கு வந்தாகவேண்டும். இல்லையென்றால் அந்த உலகிலேயே தங்கிவிட நேரும் என்பதால், மிகெல் நேரத்துடன் போட்டிப்போடுகிறான். இறந்தவர்களின் உலகில் அனைவருமே எலும்புக் கூடுகளாக டான்டேவின் கண்களுக்குத் தெரிவதால், அது அவர்களைத் துரத்த ஆரம்பிக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலை இந்தப் படம் பிரதிபலித்து, தீர்வும் சொல்ல முயற்சி செய்கிறது. தனக்கான ஆசைகளை, லட்சியங்களை நோக்கிச் செல்வதா? இல்லை, குடும்பத்தின் தேவைகளை உணர்ந்து, அவர்களின் பாதையில் செல்வதா?. ஜாலியாகப் பல விஷயங்களைச் சொன்னாலும் படத்தின் முக்கியமான விஷயம் இதுதான்.
பிக்ஸார் அனிமேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் 19-வது படம் இந்த கோகோ. லீ அன்க்ரிச் இயக்கத்தில் அற்புதமாக வெளிவந்திருக்கிறது! இவர் ஏற்கெனவே இயக்கிய ’டாய் ஸ்டோரி 3’, சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது.
உறவுகளின் முக்கியத்துவம், கூட்டுக் குடும்பத்தின் நன்மை, பெரியவர்களுக்கு மரியாதை, எல்லோரிடமும் அன்பு என்று பல விஷயங்களைக் கதையின் போக்கிலேயே அழகாகச் சொல்லியிருக்கிறது இந்தத் திரைப்படம். குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரும் கொண்டாடக்கூடிய திரைப்படம் கோகோ!