

அடிபட்ட பாம்பு கடிக்காமல் விடாது என்கிறார்களே, அப்படியென்றால் பாம்பு தேடி வந்து பழிவாங்குமா டிங்கு?
- ஸ்வீட்டி ரஞ்சனி, உடுமலைப்பேட்டை.
பாம்புகள் மனிதர்களைத் தேடிவந்து கடிப்பதில்லை. மனிதர்களைக் கண்டதும் பாம்பு வேகமாகத் தப்பி ஓடிவிடவே நினைக்கும். பாம்பு தனக்கு ஆபத்து ஏற்படும்போது, தன்னைக் காப்பாறிக்கொள்வதற்காகக் கடிப்பதுபோல் செய்யும். வேறு வழியின்றிதான் கடிக்கும். அடிபட்ட பாம்பு மனிதர்களை அடையாளம் வைத்துக்கொண்டு, தேடிவந்து பழிவாங்காது. பாம்புகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, யாரோ ஒரு நல்லவர், ‘அடிபட்ட பாம்பு கடிக்காமல் விடாது’ என்று சொல்லியிருக்கலாம்! அதனால் பயம் வேண்டாம், ஸ்வீட்டி ரஞ்சனி.
– சி. அனுராதா, கோவில்பட்டி.
பார்வை கோளாறு உட்பட பல்வேறு காரணங்களால் தலைவலி வரலாம். நீங்கள் உடனே ஒரு மருத்துவரிடம் செல்லுங்கள், அனுராதா. அவர் உங்களைப் பரிசோதித்து, பிரச்சினையைச் சரி செய்துவிடுவார்.
நண்பர்களே, நான் மருத்துவர் அல்ல. உடல் நலம் தொடர்பான கேள்விகளை எனக்கு அனுப்பி, நான் பதில் சொல்லும்வரை காத்திருக்க வேண்டாம். என்ன பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று, ஆரம்பத்திலேயே சரி செய்துகொள்ளுங்கள்.
எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை நீ பார்த்ததுண்டா டிங்கு?
– டி. ஆதித்யா, மதுராந்தகம்.
கடந்த 8 ஆண்டுகளாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பார்க்க வந்துகொண்டுதான் இருக்கிறேன், ஆதித்யா. காலை முதல் மாலைவரை ஏரியின் கரையில் அமர்ந்து விதவிதமான பறவைகளை, மிக அருகில் பார்த்துக்கொண்டிருப்பது அற்புதமான அனுபவம்! பறவைகள் இரை தேடிப் பறப்பதும் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதும் அவ்வளவு அழகு! ஆயிரக்கணக்கான பறவைகளின் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் அங்கே சென்றாலும் ஏதோ முதல் முறை செல்வதுபோல் ஆர்வமாக இருக்கும். மழை இல்லாத கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவாகத்தான் பறவைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு மழை பெய்துவருவதால், பறவைகளின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களை இந்த ஆண்டும் சந்திக்கப் போகிறேன்.
ஆயிரங்கால் பூச்சியைத் தொட்டால் சுருண்டுகொள்வது ஏன் டிங்கு?
-எம்.கே. நவீன் கிருஷ்ணா, பொள்ளாச்சி.
மரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்துவிட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு. அப்புறம், மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது, நவீன்.