கதை: எறும்புகளிடம் மன்னிப்பு கேட்ட யானை

கதை: எறும்புகளிடம் மன்னிப்பு கேட்ட யானை
Updated on
2 min read

அடர்ந்த வனத்தின் ஒரு பகுதியில் கரும்பு விளைந்திருந்தது. அதற்கு அருகிலேயே எறும்புகள் கூட்டம் கூட்டமாகப் புற்றுகளைக் கட்டிக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தன.

ஒருநாள் கரும்பு விளைந்த தகவல் யானை கூட்டத்துக்கு வந்தது.

“நண்பர்களே, கரும்புகள் விளைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. உடனே புறப்படுங்கள்” என்றது தலைவர் யானை.

“கரும்பா? இதோ வருகிறோம்” என்று சக யானைகள் உற்சாகமாகக் குரல் கொடுத்தன.

நிலம் அதிர்வதை உணர்ந்து புற்றிலிருந்து வெளியே வந்தன எறும்புகள்.

எறும்புக் கூட்டத்தின் தலைவர், “புற்றுக்குள் ஓடுங்கள். யானைகள் வந்துவிட்டன. அவர்கள் கால்களில் சிக்கினால் சட்னியாகிவிடுவீர்கள்” என்று எச்சரிக்கை செய்தது.

பயத்தில் அங்கும் இங்கும் ஓடிய எறும்புகளில் சில நூறு எறும்புகள் யானைகளின் கால்களில் மிதிபட்டுவிட்டன.

யானைகள் எறும்புகளைக் கவனிக்காமல் கரும்புக் காட்டுக்குள் நுழைந்தன.

எறும்புகள் அழுதன. “என்ன ஆணவம்? அவர்களுக்குச் சரியான பாடத்தை நாம் புகட்ட வேண்டும்” என்றது ஓர் எறும்பு.

இன்னோர் எறும்பு, “நாம் உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் நமக்கும் உயிர், குடும்பம் எல்லாம் இருக்கிறது. பெரிய உருவம் என்கிற திமிர்” என்று கோபத்துடன் சொன்னது.

“பாதிக்கப்பட்ட வருத்தத்தில் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். நான் புற்று கட்டுவதற்கு முன்பே, கரும்பைத் தேடி யானைகள் வரும். அதனால் சற்றுத் தொலைவில் புற்றுகளைக் கட்டுவோம் என்றேன். யாராவது கேட்டீர்களா? ஒரு வேலையாக வடக்குப் பகுதிக்குப் போய்விட்டு வருவதற்குள், இதுதான் வசதியாக இருக்கிறது என்று இங்கே புற்றைக் கட்டி, குடியேறிவிட்டீர்கள். யானைகள் மீது குற்றம் சொல்லி என்ன பயன்?” என்றது தலைவர் எறும்பு.

“நீங்கள் என்ன சொன்னாலும் இன்று அவர்களைச் சும்மாவிடப் போவதில்லை. ஆணவத்துக்கு அடி கொடுத்தே ஆக வேண்டும்” என்று கோபப்பட்டது ஓர் எறும்பு.

“ஆமாம், நீ சொன்னதும் யானைகள் பயந்து நடுங்கிவிடுமா என்ன?”

“ஆமாம், நாம் பயந்து பதுங்கினால் பாதாளத்துச் சென்றுவிடுவோம். எதிர்த்து நின்றால் எவரெஸ்ட்டையும் புரட்டிவிடலாம்” என ஆவேசமாகப் பேசியது ஒரு குட்டி எறும்பு.

“யோசிக்காமல் இப்படி எல்லாம் செய்யக் கூடாது. நாளைக்கே நாம் வேறு இடத்துக்குச் சென்றுவிடலாம். அதுவரை புற்றுக்குள் பத்திரமாக இருங்கள். மாலையில் யானைகள் இந்த வழியேதான் செல்லும். புரிகிறதா? நாம் வசிப்பதற்குப் பாதுகாப்பான இடத்தைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டது தலைவர் எறும்பு.

மாலை நேரம் யானைகள் திரும்பிவந்தன. அதுவரை தைரியமாகப் பேசிக்கொண்டிருந்த எறும்புகள் பயந்து, புற்றுக்குள் போய்விட்டன. சற்று நேரம் கழித்து எறும்புகள் வெளியே வந்தன.

“அடச் சே, இப்படிக் கோட்டை விட்டுவிட்டோமே?” என்றது ஓர் எறும்பு.

“கவலைப்படாதே, அதோ ஒரு யானை தனியா வந்துகொண்டிருக்கு. அதனிடம் உங்கள் வீரத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்றது இன்னோர் எறும்பு.

“எல்லாரும் வாங்க. கூட்டமாக இருந்தால்தான் யானைக்குப் பயம் வரும்” என்று அழைப்பு விடுத்தது குட்டி எறும்பு.

“ஆணவ யானையே நில்.”

குரல் கேட்டு குனிந்து பார்த்த யானைக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எறும்புகளே, ஏன் என் மீது இவ்வளவு கோபம்?” என்று கேட்டது யானை.

“காலையில் கரும்புக் காட்டுக்குள் நுழையும் முன் எங்கள் கூட்டத்தில் இருந்த பலரை உங்கள் கூட்டம் மிதித்து நசுக்கிவிட்டது.”

“ஐயோ... எங்களை மன்னித்துவிடுங்கள். பொதுவாக உங்கள் தலைவர் பாதுகாப்பான இடத்தில்தான் புற்றுகளை அமைப்பார். இப்படிப் பாதையில் புற்றுகளைக் கட்டிவிட்டு, எங்களைக் குறை சொன்னால் எப்படி? நாங்கள் கவனித்திருந்தால் உங்களை மிதித்திருக்க மாட்டோம்.”

“தனியாகச் சிக்கிக்கொண்டோமே என்கிற பயமா?” என்று சிரித்தது ஓர் எறும்பு.

“பயம் ஒன்றும் இல்லை. உண்மையைச் சொன்னேன்.”

“இவனிடம் நமக்கு என்ன பேச்சு? இவனுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?”

“நம் புற்றையும் கரும்புத் தோட்டத்தையும் மிதித்து அழித்த இவன் காலை ஒடிக்கலாம்” என்றது ஓர் எறும்பு.

“ஐயோ... பயமா இருக்கு... கொஞ்சம் கருணை காட்டுங்கள்” என்றது யானை.

“உனக்கு எல்லாம் கருணையே காட்டக் கூடாது” என்றது மற்றோர் எறும்பு.

யானையை எறும்புகள் மிரட்டும் செய்தியறிந்து, எறும்புகளின் தலைவர் ஓடிவந்தது. “ஏய், நிறுத்துங்கள். என்ன காரியம் செய்கிறீர்கள்? தனியாக வந்த யானையிடம் நம் பலத்தைக் காட்டக் கூடாது. பிழைத்துப் போகட்டும். விட்டுவிடுங்கள்” என்றது.

“அதெல்லாம் முடியாது” என்றன எறும்புகள்.

“சிறியவர்களாக இருந்தாலும் என்னைப் பார்த்துப் பயப்படாமல் நியாயம் கேட்கும் உங்கள் குணத்தைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் கவனமாக வந்திருந்தால் உங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. இனி இப்படி ஒரு தவறு செய்ய மாட்டோம். மன்னித்து விடுங்கள்” என்று பணிவுடன் சொன்னது யானை.

மகிழ்ந்த எறும்புகள், “அந்தப் பயம் இருக்கட்டும், ஓடிப் போய்விடு” என்று வழிவிட்டன.

யானை புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.

“தலைவரே, எப்படி யானையை ஓட விட்டோம் பார்த்தீங்களா?” என்று எறும்புகள் சிரித்தன.

“அது பயம் அல்ல. பெருந்தன்மை. தாங்கள் செய்த தவறுக்காக வருந்துவதால் வந்த பணிவு. நீங்கள் இதை உங்கள் வெற்றியாகப் பார்க்கக் கூடாது” என்றது தலைவர் எறும்பு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in