

மேஜிக் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? மேஜிக் மாஸ்டர் விதவிதமாக செய்யும் மேஜிக்குகளை பார்த்து கைத்தட்டி ரசித்திருப்பீர்கள் அல்லவா? இதை பார்க்கும்போது உங்களுக்கும் மேஜிக் செய்ய ஆசை வந்திருக்குமே? மேஜிக் செய்வது ரொம்ப கஷ்டம் இல்லை. முறையாக பயிற்சி செய்தால் நீங்களும்கூட மேஜிக் செய்யலாம். மேஜிக் செய்ய பழகி பார்க்கிறீர்களா?
தேவையான பொருட்கள்:
லைட் கலர் பலூன்கள் 4
டார்க் கலர் பலூன்கள் 4
செல்லோ டேப்
குண்டூசி ஒன்று
நூல்
மேஜிக்
நீங்கள் மேஜிக் செய்யும் இடத்தில் 4 பலூன்களை கட்டித் தொங்கவிட வேண்டும். மேஜிக் செய்யும்போது பார்வையாளர்கள் முன் இந்த பலூன்கள் ‘வண்ணம் மாறும்’ என்று சொல்லி மேஜிக், மேஜிக் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு பலூன்களாக தொட்டுக்கொண்டே வரவும். ஒவ்வொரு பலூனும் வண்ணம் மாறி மற்றவர்களை வியக்க வைக்கும்.
இது எப்படி?
முதலில் லைட் கலர் பலூன்களை ஒவ்வொரு டார்க் கலர் பலூன்களுக்குள் சொருகிக் கொள்ளவும்.
ஒன்றாக பிடித்து உள்ளே உள்ள பலூனை ஊதிப் பெரிதாக்கவும். பின்னர் வெளியே உள்ள பலூனை உள்ளே உள்ள பலூனைவிட சற்று பெரிதாக ஊதி சேர்த்துக் கட்டி விடவும்.
படத்தில் காட்டியது போல உங்கள் வலது கை ஆள் காட்டி விரலில் குண்டூசியை சேர்த்து வைத்து செல்லோ டேப் கொண்டு ஒட்டிக் கொள்ளவும். (இது மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளவும்)
இப்போது தொங்கிக் கொண்டிருக்கும் 4 பலூன்களை தொடுவது போல உங்கள் விரலில் உள்ள குண்டூசியால் வெளியே உள்ள டார்க் கலர் பலூனை மட்டும் மெதுவாகக் குத்தி உடைக்கவும். இப்போது உள்ளே உள்ள பலூன் வண்ணம் பளிச்சிடும்.
இதை பலமுறை செய்து பார்த்து, பழகிய பிறகு மேஜிக் செய்யுங்கள்.