

ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா, டிங்கு?
– அ. இளமதி அன்புமணி, 8-ம் வகுப்பு, மணிமேகலை மாநகராட்சி பெண்கள் பள்ளி, மதுரை.
எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு மின்சக்தியைக் கொண்டு ஒளியை வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ வாட் பல்புகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும் மின் கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான பல்புகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன, இளமதி அன்புமணி.
– கா. ஹரிணி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
பறக்கும் பாலூட்டியான வெளவாலுக்கு கால்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. பறப்பதற்கு ஏற்ற வகையில் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக மரக் கிளைகளைப் பின்னங்கால்களால் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இப்படித் தொங்கும்போது எதிரிகளின் கண்களுக்குச் சட்டென்று இவை புலப்படுவதில்லை. அது மட்டுமின்றி, பறவைகளைப்போல நிலத்திலிருந்து வெளவால்களால் பறந்து செல்ல முடியாது. தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போது எளிதாகப் பறந்து சென்றுவிட முடியும். தலைகீழாகத் தொங்கும்போது குறைவான சக்தியே செலவாகிறது என்பதாலும் வெளவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன, ஹரிணி.
காசு சேமிக்கும் உண்டியல்கள் ஏன் பெரும்பாலும் பன்றியின் வடிவத்தில் இருக்கின்றன டிங்கு?
– மீ.ஷா. ஷப்ரீனா, திருவிதாங்கோடு.
பழங்காலத்தில் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன. தாங்கள் சேமிக்கும் நாணயங்களை இந்த மண் பாத்திரங்களில் போட்டு வைத்தனர். மண் பாத்திரங்களின் காவி நிறத்தை Pygg என்றும் காவி நிற மண்பானைகளை Pygg Pot என்றும் அழைத்தனர். காலப்போக்கில் மருவி அது Pig என்றாகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மக்கள் மண்பாண்டம் செய்பவர்களிடம் பன்றி உண்டியல்களை என்று கேட்க ஆரம்பித்தனர்.
அதனால் பன்றி வடிவில் உண்டியல்கள் செய்யப்பட்டன. அவற்றை Piggy bank என்று அழைத்தனர். இந்தோனேஷியாவில் 15-ம் நூற்றாண்டிலேயே காட்டுப் பன்றி உருவ உண்டியல்கள் இருந்திருக்கின்றன. இப்படித் தற்செயலாக உண்டியல்கள் பன்றி வடிவங்களை எடுத்திருக்கின்றன, ஷப்ரீனா.
நம் ஊர்களில் பழங்கள், காய்கள், மனிதர்கள், விலங்குகள் என்று பல வடிவங்களில் அழகழகான உண்டியல்கள் கிடைக்கின்றன. அது சரி, உங்களுக்கு உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் உண்டா?