

என் பெயர் சாம். என் நண்பன் பில் டிரிஸ்கோல். நாங்கள் இருவரும் குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தோம். எங்களிடம் 500 டாலர்கள் மட்டுமே இருந்தன. இன்னும் 2 ஆயிரம் டாலர்கள் எங்களுக்குத் தேவைப்பட்டன. அதற்காக ஒரு பணக்காரச் சிறுவனைக் கடத்தி, பணம் பறிக்கத் திட்டமிட்டோம். பக்கத்து மலையில் உள்ள குகையில் உணவுப் பொருள்களை வாங்கி வைத்தோம்.
நாங்கள் அந்த ஊருக்குச் சென்றபோது எபிநேசர் டார்செட்டின் மகன், ஆரஞ்சு மரத்திலிருந்த ஒரு பழத்தைக் கல்லால் அடிக்கக் குறிபார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் அவனைக் கூப்பிட்டதும், கையில் இருந்த கல்லை பில் மீது எறிந்தான். வலியில் துடித்த பில், “இதற்கு இவன் அப்பாவிடம் 500 டாலர்கள் கூடுதலாக வாங்க வேண்டும்” என்றான். 9 வயதுச் சிறுவனாக இருந்தாலும் எங்களால் அவனை எளிதாகப் பிடிக்க முடியவில்லை. திடீரென்று என்ன நினைத்தானோ, அவனே எங்களுடன் வந்துவிட்டான். குதிரை வண்டியில் மலைக்குச் சென்றுவிட்டோம்.
இரண்டு கடத்தல்காரர்களிடம் சிக்கியிருக்கிறோம் என்கிற பயமே அந்தச் சிறுவனிடம் இல்லை.
“ஆஹா! இந்த மலையும் காடும் அற்புதமாக இருக்கின்றன. நான் இதுவரை இப்படி ஒரு இடத்துக்கு வந்ததில்லை” என்று அவன் உற்சாகமாகச் சொன்னதும் பில்லுக்கும் எனக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
தரையில் கிடந்த பறவைகளின் இறகுகளை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டவன், “நான்தான் பழங்குடி மக்களின் தலைவன். நான் சொல்வதை நீங்கள் இருவரும் கேட்க வேண்டும்” என்றான்.
பில் கோபத்தில் அவனைத் திட்டினான்.
“தலைவனைத் திட்டிய உனக்கு நிச்சயம் தண்டனை உண்டு” என்றான் அந்தச் சிறுவன்.
இரவு சாப்பிட்டுவிட்டு மூவரும் படுத்தோம். திடீரென்று கண் விழித்தபோது, அந்தச் சிறுவன் பில்லின் தலைமுடியைக் கத்திரிக்கோலால் வெட்ட முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனிடமிருந்து கத்திரிக்கோலை வாங்கி வைத்தேன்.
இங்கேயும் அங்கேயும் தாவித் தாவி குதித்தான். எங்கள் இருவரையும் ஒரு நிமிடம்கூடத் தூங்கவிடவில்லை.
‘பில்லின் மூக்கு ஏன் சிவப்பாக இருக்கிறது, சாப்பிட ஏதாவது கிடைக்குமா, எருது எப்படிக் கத்தும், ஆரஞ்சு ஏன் உருண்டையாக இருக்கிறது, நட்சத்திரம் சூடாக இருக்குமா’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்கள் உயிரை வாங்கினான்.
சற்று நேரத்தில் அவன் தூங்கிய பிறகுகூட எங்களால் தூங்க முடியவில்லை. அவனை நாங்கள் கடத்தினோமா, அவன் எங்களைக் கடத்தினானா என்று எங்களுக்கே சந்தேகமாக இருந்தது.
பொழுது விடிந்தது. சிறுவனைக் கடத்தியவர்களைக் கோபத்துடன் தேடுவார்கள் என்று நினைத்து ஊருக்குள் சென்றேன். ஆனால், ஊரே அமைதியாக இருந்தது. திரும்பி வந்தபோது பில் பேயறைந்ததுபோல இருந்தான்.
“என்னை ஏன் இவனிடம் தனியாக விட்டுவிட்டுச் சென்றாய்? என்னைக் குதிரையாக மாற்றி, ஏறி உட்கார்ந்து, நீண்ட தூரம் நடக்க வைத்துவிட்டான்” என்று பில் அழுதான்.
கோபத்துடன் சிறுவனை முறைத்தேன். உடனே ஒரு கல்லை எடுத்து வீசினான். நான் விலகினேன். அடுப்பில் இருந்த பானை மீது விழுந்து, பானை உடைந்து, அடுப்பு அணைந்துவிட்டது.
“இன்றே இவன் அப்பாவுக்குக் கடிதம் எழுதிடறேன்” என்று வேலையில் இறங்கினேன்.
2 ஆயிரம் டாலர்களைக் கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, 1,500 டாலர்களைக் கேட்டு, கடிதம் எழுதினோம். அதைச் சிறுவனின் அப்பாவிடம் சேர்க்கப் புறப்பட்டேன்.
“சாம், இவனிடம் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே” என்று பில் கெஞ்சினான்.
இப்படி ஒரு கடத்தல்காரர்களை இந்த உலகம் பார்த்திருக்குமா? பில்லுக்குத் தைரியம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
டார்செட் வீட்டுத் தபால் பெட்டியில் கடிதத்தை வைத்துவிட்டு, திரும்பி வந்தபோது குகையில் யாருமே இல்லை. சிறிது நேரத்தில் பில் அழுதுகொண்டே வந்தான்.
“என்னைக் குதிரை என்றவன், ஓட்ஸுக்குப் பதில் மண்ணை திங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினான். அது மட்டுமில்லை, புல் ஏன் பச்சையாக இருக்கிறது, ஸ்ட்ராபெர்ரி ஏன் சிவப்பாக இருக்கிறது, மரம் ஏன் ஒரே இடத்தில் நிற்கிறது என்றெல்லாம் கேட்டு, என்னைக் கொடுமைப்படுத்திவிட்டான். ஒரு மனிதனால் எவ்வளவுதான் தாங்க முடியும்? அவனைக் கொண்டு போய் அவன் ஊர் எல்லையில் விட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்” என்றான் பில்.
“பில், உன் இதயம் வலிமையானதா?”
“ஏன்?”
“திரும்பிப் பார்.”
அந்தச் சிறுவன் நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் பில் மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். பில் மீது தண்ணீர் தெளித்து எழுப்பினேன்.
“சிறுவன் தூங்கியவுடன், அவனை வீட்டில் விட்டுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடலாம்” என்று பில்லைச் சமாதானம் செய்தேன்.
நடு இரவில் ஊருக்குள் சென்றோம். ஒரு கடிதம் மட்டும் இருந்தது. அதில், ‘எனக்கு 250 டாலர்களைக் கொடுத்தால், என் மகனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறேன்’ என எழுதியிருந்தார் டார்செட்.
அவர் மகனைப் பற்றி அவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். பின் குறிப்பாக, ‘அக்கம்பக்கத்தினர் இரண்டு நாள்கள் நிம்மதியாக இருந்தனர். அவர்கள் இப்போது உங்களைப் பார்த்தால், என்ன செய்வார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. கவனமாக இருங்கள்’ என்று எங்கள் மீது கரிசனத்தையும் காட்டியிருந்தார்!
இரண்டு நிமிடங்களில் டார்செட் வெளியில் வந்தார். சிறுவனை ஒப்படைக்கும்போது, அவன் விழித்துவிட்டான்.
“என்னால், இரண்டு நிமிடங்கள்தாம் அவனைப் பிடித்திருக்க முடியும். வேகமாக ஓடிவிடுங்கள்” என்றார் டார்செட்.
இனி இப்படி ஒரு தவறு செய்யக் கூடாது என்று நினைத்துக்கொண்டே நானும் பில்லும் தலைதெறிக்க ஓடினோம்.
மூலக்கதை: ஓ. ஹென்றி
தமிழில்: கோகிலா