

சூழலியல் சுற்றுலா என்றால் என்ன, டிங்கு?
- ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
சூழலியல் சுற்றுலா என்பது காடு, மலை, விலங்குகள், பறவைகள், மரங்கள் சூழ்ந்த இயற்கையான பகுதிகளுக்கு, அந்தச் சூழலைக் கெடுக்காதவாறு சுற்றுலா செல்வது. காட்டு மரங்களை வெட்டுவது, விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவது போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கும் சட்டங்கள், வனத்தையும் வன உயிரினங்களையும் காக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்க விடாமல் மனிதர்கள் கண்காணிக்கவும் வேண்டியிருக்கிறது. அதனால், பாதுகாக்கப்பட்ட இது போன்ற பகுதிகளில் சூழலைப் பாதுகாப்பதற்கும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் ‘சூழலியல் சுற்றுலாக்கள்’ ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இதன் மூலம் பயணிகளும் வித்தியாசமான இயற்கையான சுற்றுலாக்களை அனுபவிக்க முடியும். அந்தப் பகுதியில் உள்ள உயிரினங்களும் பாதுகாக்கப்படும். அங்கு வசிக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். அரசாங்கத்துக்கு வருமானமும் வரும். இதுதான் சூழலியல் சுற்றுலா, இனியா.
தேநீர் அருந்தியவுடன் புத்துணர்வு வருவதாகச் சொல்கிறார்களே உண்மையா, டிங்கு?
- எம். முகமது ஃபாதில், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
உண்மைதான் முகமது ஃபாதில். சோர்வாக இருக்கும் போதோ தூக்கம் வரும்போதோ தேநீர் குடித்தால், புத்துணர்வு வந்துவிடும். இதற்குக் காரணம், தேயிலை, காபி போன்றவற்றில் உள்ள கஃபீன் என்கிற பொருள்தான். இது விழிப்புணர்வையும் கவனத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தவிர, உடலுக்கு நன்மையளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் தேநீரில் உள்ளன. இவை மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.