

பிறந்த நொடியிலேயே கண்ணீருடனான நமது உறவு தொடங்கிவிடுகிறது. வாழ்நாள் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக நாம் அழுகிறோம். சில நேரம் வலியால் அழுகிறோம். சில நேரம் வருத்தத்தால் அழுகிறோம். சில நேரம் மகிழ்ச்சியில்கூட அழுகிறோம். பொதுவாக எல்லா விலங்குகளும் கண்ணீர் விடுகின்றன. ஆனால், மனிதர்களின் அழுகை மட்டுமே உணர்வின் வெளிப்பாடாக இருக்கிறது. மனிதர்கள் ஏன் அழ வேண்டும்? பரிணாம வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் மனிதர்களின் அழுகைக்கு என்ன அர்த்தம்?
கண்ணீர் மூன்று காரணங்களுக்காக வருகிறது. ஒன்று, நம் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் கண்ணீர் வருகிறது. புகையோ தூசியோ நம் கண்களில் படும்போது உடனே கண்ணீர் சுரந்து அவற்றைச் சுத்தம் செய்கிறது. எரிச்சலைப் போக்குகிறது. இரண்டாவதாக, நம் கண்கள் வறண்டு விடாமல் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகக் கண்ணீர் வருகிறது. இதற்காக மட்டும் மனித உடல் தினமும் சராசரியாக 280 மி.லி. வரை கண்ணீரைச் சுரக்கிறது. மூன்றாவது காரணம்தான் வலுவானது.சோகம், வலி உள்ளிட்ட உணர்வு பூர்வமான காரணங்களுக்காகக் கண்ணீர் வருகிறது. இதைத்தான் நாம் அழுகை என்கிறோம்.
எந்தக் காரணத்துக்காகக் கண்ணீர் சுரந்தாலும் அதில் உப்பு, புரதங்கள், கிருமி எதிர்ப்பு நொதிகள் ஆகிய மூன்றும் இடம்பெற்றிருக்கும். ஆனால், நாம் கவலையில் இருக்கும்போது வரும் கண்ணீரில் மட்டும் அதிகமான புரதங்கள் இடம்பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களும் இயற்கை வலி நிவாராணிக்கான ஹார்மோன்களும் அந்தக் கண்ணீரில் இடம்பெறுகின்றன.
இதனால்தான் நாம் அழுது முடித்தவுடன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் புத்துணர்வை உணர்கிறோம். ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே உணர்வுபூர்வமான கண்ணீர் வருவதில்லை, உண்மையில் மனிதர்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவே, நம்பிக்கையை வலுப்படுத்தவே கண்ணீர் சுரப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பேச்சு, சைகையைப் போல அழுகையும் தகவல்களைப் பரிமாற உதவும் மொழிதான். ஆனால், அழுகை மற்ற தகவல் பரிமாற்றங்களைவிடச் சக்தி வாய்ந்தது. மனிதர்களை இணைக்கக்கூடியது. அழுகையைப் போல மனிதர்களை வலுவாக ஒன்றிணைக்கும் தகவல்தொடர்பு வேறு எதுவும் இல்லை.
மனிதர்கள் குழுவாக இயங்கும் விலங்கினத்தைச் சேர்ந்தவர்கள். நம்மைச் சுற்றி இருக்கும் ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குக் கூட்டுறவும் ஒத்துழைப்பும் அவசியம். அதே நேரம் மற்ற விலங்குகளைவிட மனித இனத்தில்தான் போட்டியும் அதிகம்.
நமக்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த அறிவு நமக்கு இடையேயான போட்டியை வளர்ப்பதற்குத்தான் உதவி இருக்கிறது. இந்தப் போட்டி உணர்வால் மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பு உடைந்து மரணம்கூட நிகழலாம். மனிதர்களிடம் உணர்வுரீதியான இந்தப் பிளவைச் சரிசெய்வதற்காகத் தோன்றிய உடல் மொழியே அழுகை.
அழுகை என்பது நாம் தொந்தரவுக்கு உள்ளாகி இருக்கிறோம் என்பதைப் பிறருக்கு உணர்த்துகிறது. பொதுவாக மரணம், நோய், விபத்து ஆகியவை நிகழும்போதுதான் அழுவோம். அந்த நேரத்தில் நாம் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பலவீனமாக இருப்போம்.
பலவீனமான சூழலில் நமக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அது மட்டுமல்லாமல் அதிர்ச்சியில் உறைந்து இருக்கும்போது நம்மால் பேச்சு மொழியையோ, உடல்மொழியையோகூட வெளிப் படுத்த முடியாது. இத்தகைய நேரத்தில் ‘எனக்கு உதவி தேவை’ என்பதைத் தெரிவிக்கவே கண்ணீர் வெளிப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சக மனிதரின் அழுகையைக் காணும்போது ஒருவருக்குள் இருக்கும் போட்டி எண்ணம் குறைந்து, உதவும் மனப்பான்மை துளிர்விடுகிறது. இதுதான் அழுகையின் முதன்மை நோக்கம் என்று தெரிவிக்கின்றன ஆய்வுகள். இதனால்தான் நாம் குழந்தையாக இருக்கும்போதே அழுகை தொடங்கிவிடுகிறது. காடுகளில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவாக நின்று பிழைத்திருக்க முடிந்ததற்கு முக்கியக் காரணமாக அழுகையும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
உண்மையில் மற்ற உடல்மொழிகளைவிட அழுகை மூலம் உணர்த்தப்படும் செய்தியில்தான் அதிக நம்பகத்தன்மையை மனிதர்கள் உணர்வதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். பிழைத்திருத்தல் என்கிற பார்வையில் பார்க்கும்போது அழுகை என்பது உண்மையில் பலவீனத்தை வெளிப்படுத்தக்கூடியது.
அதனால் மனிதர்களுக்குப் பலமோ ஆற்றலோ கூடுவதில்லை. இருப்பினும் அது இயற்கையால் வழங்கப்பட்டிருப்பதற்குக் காரணம், அதன் மூலம் வெளிப்படும் செய்தி பாசாங்குத்தன்மையற்றது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் நோக்கில்தான். அதனால்தான் கண்ணீரைக் கண்ட உடனே, நம் கோபம் விலகி எதிரியாக இருந்தாலும் ஆதரவளிக்க விரும்புகிறோம்.
இன்றைய சூழலில் மனிதகுலம் நாகரிக வளர்ச்சி அடைந்த பிறகு அழுகையைக்கூடப் போலியாக வெளிப்படுத்தும் தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டோம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். திரைப்படங்களில் ஒருவர் அழுவதைப்போல நடிப்பதற்குக்கூட நாம் மனம் இரங்குகிறோம் என்றால் அழுகைக்கு இருக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ளுங்கள்.
(விடைகளைத் தேடுவோம்)
- tnmaran25@gmail.com