Last Updated : 08 Nov, 2017 10:34 AM

 

Published : 08 Nov 2017 10:34 AM
Last Updated : 08 Nov 2017 10:34 AM

பூமி என்னும் சொர்க்கம் 18: சராசரி கடல் மட்டம் என்றால் என்ன?

 

தெ

ரு ஓரத்தில் கற்கள் ஒரு குவியலாகக் கிடக்கும். ஆனால் அருகே ஒரு குழியில் தேங்கியுள்ள நீர் இப்படிக் குவியலாக இருக்காது. குழியோ, நீச்சல் குளமோ, ஏரியோ, கடலோ எதுவாக இருந்தாலும் தண்ணீரானது எப்போதும் ஒரு மட்டத்தில் காணப்படும். திரவப் பொருட்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்கும்.

இது பல வகைகளிலும் நமக்கு வசதியாக இருக்கிறது. கட்டிடத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியின்போது கட்டுமானம் ஒரே மட்டத்தில் உள்ளதா என்று அவ்வப்போது சோதிக்க நீண்ட மெல்லிய பிளாஸ்டிக் குழாய்களில் தண்ணீரை ஊற்றி அதைப் பயன்படுத்துகின்றனர். ரசமட்டம் எனப்படும் கருவியும் உண்டு.

ஓர் இடத்தின் உயரத்தைக் குறிப்பிட நாம் கடல் நீரின் மட்டத்தை அடிப்படையாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் பூமியில் கடல் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.அத்துடன் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதால் நாமாக சராசரி கடல் மட்டம் என ஒன்றை நிர்ணயித்து அதைப் பயன்படுத்துகிறோம்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர். இவ்வாறு கூறுவது எவரெஸ்ட் சிகரம் சராசரி கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. உங்கள் ஊர் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதும் இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது, சரி, உங்கள் ஊர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் ஊரில் ரயில் நிலையம் இருக்குமானால் நடைபாதையின் கோடியில் உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தால் போதும். அதன் அடிப்புறத்தில் above 245 MSL என்று எழுதப்பட்டிருந்தால் உங்கள் ஊரானது சராசரி கடல் மட்டத்திலிருந்து 245 மீட்டர் உயரத்தில் உள்ளது என்பதை அது காட்டும். MSL என்பது சராசரி கடல் மட்டம் (Mean Sea Level) என்பதைக் குறிப்பதாகும்..

சராசரி கடல் மட்டம் என்று கூறுவதற்குக் காரணம உள்ளது. நீச்சல் குளத்தில் அல்லது ஓர் ஏரியில் நீர் மட்டம் சலனமற்று இருக்கலாம். மாறாக, கடல்களில் எப்போதும் அலைகள் உண்டு. சில சமயங்களில் பெரிய அலைகளும் இருக்கும். இதற்கு காரணம் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு சக்தி. காற்றும் ஒரு காரணமே.

கடல்களில் வேலையேற்றம் வேலையிறக்கம் என உண்டு. (வேலை என்றால் கடல் என்று பொருள்) குறிப்பாகத் துறைமுகப் பகுதிகளில் இது நன்கு புலப்படும். அதாவது ஒரு சமயம் கடல் நீரானது துறைமுகத்துக்குள் வெள்ளம் போலப் பாயும். அது வேலையேற்றம். இன்னொரு சமயம் வெள்ளம் போன்று துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியேறும். இது வேலையிறக்கம். இப்படியாகக் கடல் நீரின் மட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது.

இது போதாதென சூரியனிடமிருந்து கடல்கள் பெறும் வெப்பம் காரணமாக நீர் விரிவடைந்து கடல்களில் சில இடங்களில் கடல் நீர் ’மேடு’ போல அமைந்திருக்கும். இப்படி ’மேடு’ போல உள்ள இடங்களிலிருந்து கடல் நீர் வேறு பகுதிக்கு நதிபோல ஓடும். இதைக் கடல் நீரோட்டம் என்று கூறுவார்கள். கடல் நீரோட்டம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் செல்வதாக இருக்கலாம். உலகில் பல இடங்களில் கடல் நீரோட்டங்கள் உள்ளன.

தவிர, வட அமெரிக்கக் கண்டத்தையும் தென் அமெரிக்கக் கண்டத்தையும் இணைக்கும் நிலப் பகுதியில் மேற்கே உள்ள பசிபிக் கடலின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தை விட சுமார் 20 சென்டிமீட்டர் உயரமாக உள்ளது.

கடந்த நூற்றாண்டில் நடந்த ஆய்வுப்படி விசாகப்பட்டினத்தில் அதாவது வங்கக் கடலின் நீர் மட்டம் மும்பையில் அதாவது அரபிக் கடலின் நீர் மட்டத்தை விட 30 சென்டிமீட்டர் உயரமாக உள்ளது. காற்றின் போக்கு, கடலில் கலந்துள்ள உப்பு அளவு போன்றவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரச்சினை இத்துடன் நிற்கவில்லை. பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதால் வட, தென் துருவப் பகுதிகளில் பனிப் பாளங்கள் மெல்ல உருகிவருவதால் கடலின் நீர் மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 3.2 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து வருகிறது. இவையெல்லாம் கடல் மட்டம் என்பது நிலையான ஒன்று அல்ல என்பதைக் காட்டுகிறன.

கடல் மட்ட நிலைமைகளை ஆராய்வதற்கென்றே பல ஆய்வு செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன. இவையும் கடல் மட்டம் மெல்ல உயர்ந்துவருவதை உறுதிப்படுத்தியுள்ளன.

இத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டுதான் சராசரி கடல் மட்டம் கணக்கிடப்பட்டு, அது பயனில் உள்ளது.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x