

இந்தியாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்கள் ஏன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகின்றன, டிங்கு?
- எஸ்.ஜெ. கவின், 8-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
கிழக்குக் கடற்கரையில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்கிறது ஸ்ரீஹரிகோட்டா. பூமி சுழற்சியின் காரணமாக, இங்கிருந்து கூடுதல் திசைவேகம் விண்கலனுக்குக் கிடைக்கும். இங்கிருந்து கிழக்கு நோக்கி விண்கலன்களைச் செலுத்துவது பலவிதங்களில் சிறந்ததாக இருப்பதால், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்கலன் களை அனுப்புகிறார்கள், கவின்.
கடந்துபோன வரலாறுகளை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும், டிங்கு?
- ச. திவ்யஸ்ரீ, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர்.
நாம் வாழும் காலமும் எதிர்காலமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கடந்த காலமும் நமக்கு முக்கியம். எந்த நிலையிலிருந்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். கடந்த கால நிகழ்வுகளை நாம் அறிந்துகொள்வதன் மூலம், அந்த வரலாற்றிலிருந்து பாடமும் கற்றுக்கொள்கிறோம். நல்ல நிகழ்வுகளிலிருந்து நல்லவற்றையும் தீய நிகழ்வுகளிலிருந்து ‘அது போன்று செய்யக் கூடாது’ என்பதையும் நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
அதாவது அமெரிக்கர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தியது, ஹிட்லர் இனத்தின் பெயரால் யூதர்களைக் கொன்று அழித்தது, போர்களால் ஏற்பட்ட பாதிப்புகள், அணுகுண்டுகளால் ஏற்பட்ட விளைவுகள், ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் அனுபவித்த துயரங்கள் போன்ற வரலாறுகளில் இருந்து நாம், இன வேறுபாடு கூடாது, யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது, அணுகுண்டுகளை வீசக்கூடாது, போர்கள் கூடாது என்கிற பாடங்களை கற்றுக்கொண்டு, அவற்றைச் செய்யாமல் இருக்கவும் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம், திவ்யஸ்ரீ.
கடகடலில் சிலந்திகள் இருப்பது உண்மையா, டிங்கு?
- ஆர். கிருத்திகா, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
‘கடல் சிலந்தி’ என்கிற உயிரினம் கடலில் வாழ்கிறது. ஆனால், நிலத்தில் வாழும் சிலந்தியும் அந்தக் கடல் சிலந்தியும் ஒரே வகை உயிரினம் அல்ல. சிலந்தியைப் போன்றே நீளமான எட்டுக் கால்களுடனும் சிறிய உடலுடனும் இவை காணப்படுகின்றன. சிலந்தியும் கடல் சிலந்தியும் கணுக்காலிகள் (Arthropoda) வகையைச் சேர்ந்தவை. கால்களை மட்டுமல்ல, உடல் உறுப்புகளை இழந்தாலும் மீண்டும் பெற்றுவிடக்கூடியவை கடல் சிலந்திகள் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிரார்கள், கிருத்திகா.