

முதிர்ந்த இலைகள் இரண்டு தங்கள் வாழ்க்கை முடியப்போவதை எண்ணிப் பயந்தன. இளமையில் தென்றல் காற்றுடன் சேர்ந்து ஆடிக் கழித்த நாள்களை அவற்றால் மறக்கவே முடியாது. தையல் சிட்டுக்குக் கூடு அமைக்க உதவியதும் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் இன்றும் நினைவில் இருக்கின்றன.
முதல் இலை, “கீழே உதிர்ந்த பிறகு சீக்கிரமே காய்ந்து போவோம். பிறகு என்ன ஆவோம்?” என்று மற்றோர் இலையிடம் கேட்டது.
“மண்ணுக்கு அடியில் வேறு உலகம் இருக்கிறது. அதையும் பார்க்கலாம்" என்று ஆறுதல் சொன்னது இரண்டாவது இலை.
மறுநாள் அவை இரண்டும் மரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்தன. மண்ணில் புதைந்த அவற்றின் பாகங்கள் மெதுவாக மக்கின. திடீரென்று சன்னமான ஒரு குரல், முதிர்ந்த இலைகளின் கவனத்தை ஈர்த்தது.
“அம்மா, இப்போது நான் மரத்தின் வேர்ப் பகுதியை நெருங்கிவிட்டேன். தனியாக இரை தேட வந்த முதல் நாள் பயணம் உபயோகமாகவே உள்ளது. நிறைவாகச் சாப்பிட்டேன். நீயும் என்னோடு சேர்ந்துகொள்வாயா?”
“இல்லை செல்லமே. என்னை எதிர்பார்க்காமல் உன் வயிற்றை நிரப்பிக்கொள்கிறாய் என்பதே எனக்கு சந்தோஷம்.”
மண்ணுக்கடியில் நெளிந்து முன்னேறும் ஒரு குட்டி மண்புழு, அம்மாவிடம் பேசிக்கொள்வதைக் கேட்டு இலைகள் மகிழ்ந்தன.
“அப்பாவை மட்டுமாவது இங்கே வரச் சொல்” என்று அம்மாவிடம் கெஞ்சியது குட்டி மண்புழு.
“போன வாரம் இதன் உரிமையாளர் நிலத்தை டிராக்டர் வைத்து உழுதார். உழவு எந்திரத்தின் இரும்புப் பற்களில் சிக்கி, உனது அப்பாவின் வால் வெட்டுப்பட்டுவிட்டது. நீ கவலைப்படுவாய் என்று உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்" என்றது அம்மா மண்புழு.
“ஐயோ, என்னம்மா சொல்றீங்க?” என்ற குட்டி மண்புழுவுக்கு அழுகை வந்தது.
“வருத்தப்படாதே, அவர் வேர்களுக்கு இடையில் அமைதியாக ஓய்வெடுக்கிறார். இன்னும் சில நாள்களில், வால் மறுபடியும் வளர்ந்துவிடும். பிறகு நாம் எல்லாரும் சேர்ந்து ’மண்ணடித் திருநாள்’ கொண்டாடுவோம்” என்று ஆறுதல் சொன்ன அம்மாவின் வார்த்தைகள், குட்டி மண்புழுவுக்கு நம்பிக்கை அளித்தன.
“அம்மா, இந்தப் பகுதியில் விதைகளை விதைக்கப் போவதாகப் பேசிக்கொண்டார்கள்.”
“அப்படியா, அவை நன்றாக வளர நாம் உதவ வேண்டும். விதைப்பதற்கு முன்பே நாம் மண்ணை வளப்படுத்திவிடலாம். மண் இளகினால் காற்றோட்டம் இருக்கும். நீரும் உள்ளே செல்லும். செடிகள் வளர உதவும்.”
“அப்படியே செய்கிறேன் அம்மா” என்று பதிலளித்த குட்டி மண்புழுவுக்கு அடுத்து ஒரு சந்தேகம்.
“என் நண்பனுக்குத் தாத்தா, பாட்டி எல்லாம் இருக்காங்க. என் தாத்தா, பாட்டி எங்கே?”
“இந்த நில உரிமையாளர் முன்னாடி ரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினார். அதில் ஒருநாள் உன் தாத்தாவும் பாட்டியும் இறந்துவிட்டார்கள். நிலமும் எதுவும் விளைவிக்க முடியாத அளவுக்குக் கெட்டுப் போய்விட்டது.”
“ரசாயன உரங்கள் ஆபத்தானவையா?”
“நமக்கு மட்டுமல்ல, விவசாயத்துக்கும் எதிரி. இந்த விவசாயி இப்போது முற்றிலும் மாறிவிட்டார். நிலம் ஆரோக்கியமாக இருக்கவும் விளைச்சலை அதிகரிக்கவும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறார்.”
“ஓ, இனி நம்ம உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காது.”
“ஆமாம் செல்லமே. நீ தைரியமாக வாழலாம்.”
“மகிழ்ச்சி அம்மா. இனி உலகில் உள்ள ஆச்சரியங்களைத் தேடிச் செல்வேன்.”
“அது உனக்கு சாகசப் பயணமாக அமையட்டும். ஆனால்...”
“என்னம்மா?”
“நீ எப்போதும் மண்ணுக்கடியிலேயே பயணம் செய். நிலத்துக்கு மேலே சென்று வெளி உலகைக் காண ஆசைப்படாதே. உயிருக்கு ஆபத்து. காட்டுக் கோழிகளும் கழுகுகளும் நம்மை உணவாக்கிக் கொள்ளக் காத்திருக்கின்றன” என்றது அம்மா மண்புழு.
மண்புழுக்களுக்கு இடையே நடந்த உரை யாடலைக் கேட்டுக்கொண்டிருந்தன பழுப்பு இலைகள்.
குட்டி மண்புழு மீண்டும் அம்மாவை அழைத்தது.
“அம்மா, என்னருகில் இப்போது இரண்டு பழுப்பு இலைகள் விழுந்து கிடக்கின்றன. அவற்றைச் சாப்பிடப் போகிறேன்” என்றதும் முதல் இலைக்கு நெஞ்சு அடைத்தது.
“இளமையில் கம்பளிப் புழுவிடமிருந்து தப்பிப் பிழைக்க காற்று உதவியது. ஆனால், இங்கு நம்மை யார் காப்பாற்றுவார்கள்?”
“மண்ணில் விழுந்த இலைகளின் பயனை எண்ணி வியக்கிறேன். மண்புழுக்கள் இலைகளைச் சாப்பிட்டு வெளியேற்றும் எச்சத்தினால், மண்ணில் சத்துகள் அதிகரிக்கின்றன. அவை பயிர் வளர்ச்சிக்குப் உதவியாக இருக்கின்றன” என்றது அம்மா மண்புழு.
அதைக் கேட்டதும் இலைகளின் மனதில் நேர்மறை எண்ணங்கள் பிறந்தன.
“மக்கிய பிறகான வாழ்க்கை பயனுள்ளதாகவே இருக்கும்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னது முதல் பழுப்பு இலை.