

செண்பகக் காட்டில் உள்ள விலங்குகள் புதிய சிங்க ராஜாவைத் தேர்ந்தெடுத்திருந்தன. அதுவும் பதவிக்கு வந்த சில மாதங்கள் எல்லாருக்கும் பிடித்த மாதிரி நடந்துகொண்டது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அதன் குணம் மாறிவிட்டது. ‘இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா’ என்று தலைக்கனத்துடன் ஓடி ஆடித் திரிந்தது.
ராஜாவாகத் தேர்ந்தெடுத்த விலங்குகள் தனியாகக் கூடின. சிங்கத்தின் நடவடிக்கைகள் குறித்துத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தன.
“நீங்கள் சொல்வது சரிதான். புது சிங்க ராஜாவின் நடவடிக்கைகள் சரியில்லைதான். அதை நாம் எடுத்துச் சொல்வோம். நிச்சயம் தன்னை அது திருத்திக்கொள்ளும். யானை, மான், சிறுத்தையுடன் நானும் சென்று பேசுகிறேன். கவலைப்படாதீர்கள்” என்று அனைவருக்கும் புலி ஆறுதல் கூறியது. எல்லாருக்கும் நம்பிக்கை வந்தது.
மறுநாள் காலை புலி, சிறுத்தை, யானை, மான் ஆகிய நான்கும் சிங்க ராஜாவைச் சந்தித்தன.
“வாங்க, வாங்க. நானே புலியை அழைக்க வேண்டும் என்று நினைத்தேன். இனிமேல் தினமும் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுத்தான், விலங்குகள் தங்கள் வேலைகளைப் பார்க்க வேண்டும். வாரம் ஒருமுறை ஒவ்வொரு பகுதி விலங்குகளும் எனக்கு விருந்து வைக்க வேண்டும்...”
“இது உங்களுக்கே அநியாயமாகப் படவில்லையா?”
“ராஜாவுக்கு வணக்கம் சொல்வதைவிட முக்கியமான வேலை என்ன இருக்கிறது?”
“நாங்கள் செல்லும் வழியில் நீங்கள் எதிரில் வந்தால் வணக்கம் சொல்வதில் தவறு இல்லை. உங்களைத் தேடிவந்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்லும் அளவுக்கு இங்கே யாரும் வெட்டியாக இல்லை” என்றது யானை.
“ராஜா என்றால் உங்களை எல்லாம்விடச் சிறந்தவன் என்றுதானே அர்த்தம்?”
“இல்லை, எங்களுக்குச் சேவகம் செய்பவர் என்று அர்த்தம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள், நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்க்கிறோம். ஏதாவது பிரச்சினை என்றால், தங்களிடம் முறையிடுகிறோம்” என்றது சிறுத்தை.
“என்ன, ராஜாவுக்குப் புதிய அர்த்தமெல்லாம் சொல்றீங்க?”
“புதுசு, பழசுன்னு எந்த அர்த்தமும் இல்லை. எங்களின் சேவகர் என்கிற ஒரே அர்த்தம்தான்” என்றது மான்.
சிங்க ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் உங்களைப் போன்ற சாமானியன் இல்லை. எல்லாவற்றிலும் தலைசிறந்தவன். நான் சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். மீறினால் தண்டனை வழங்குவேன்” என்று சொல்லிக்கொண்டே ஓடியது.
எதிரில் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டது.
“ஆ... ஐயோ... நான் இந்தக் காட்டுக்கே ராஜா. என்னால் இந்தப் பள்ளத்திலிருந்து எளிதாக மேலே சென்றுவிட முடியும்” என்று சொல்லிவிட்டு, மேலே ஏற முயன்றது சிங்க ராஜா.
இரண்டு மணி நேரமாகியும் சிங்க ராஜாவால் மேலே ஏறவே முடியவில்லை. மிகவும் களைத்துவிட்டது. யாருடைய உதவியும் இல்லாமல் மேலே செல்ல இயலாது என்பது புரிந்தது.
“யாராவது வாருங்கள், நான் பள்ளத்தில் விழுந்து கிடக்கிறேன்” என்று குரல் கொடுத்தது சிங்க ராஜா.
உடனே விலங்குகள் ஓடிவந்து பள்ளத்தை எட்டிப் பார்த்தன. ஆனால், ஒன்றுகூட சிங்க ராஜாவுக்கு உதவ முன்வரவில்லை.
“ஏய், பள்ளத்தில் விழுந்து கிடப்பது உங்கள் ராஜா. உடனே என்னை மேலே தூக்குங்கள். இல்லாவிட்டால், மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள்” என்று எச்சரித்தது சிங்க ராஜா.
அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
சிங்க ராஜாவுக்குப் பசித்தது. உடல் முழுவதும் வலித்தது. அப்படியே குழிக்குள் அமர்ந்துவிட்டது. ‘இன்றோடு என் வாழ்க்கை முடிந்தது’ என்று சிங்க ராஜா நினைத்தபோது, ஒரு நிழல் தெரிந்தது. மேலே பழைய சிங்க ராஜா நின்றுகொண்டிருந்தது.
உடனே சிங்க ராஜா, “என்னைக் காப்பாற்றுங்கள்” என்றது.