

வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன்கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லாரும் ‘முன்கோபி ராஜா’ என்றே அழைத்தார்கள்.
அவருக்கு அறிவொளி என்கிற அமைச்சர் இருந்தார். பெயருக்கு ஏற்றபடி நல்ல அறிவாளி. முன்கோபி ராஜா திடீரென்று ஏதாவது முடிவு செய்வார். அது கெட்ட முடிவு என்றால், பட்டென்று எதிர்ப்பைக் காட்டிவிடுவார் அமைச்சர்.
உடனே முன்கோபி ராஜாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். “நான் ராஜாவா, நீர் ராஜாவா? நான் சொல்கிறபடிதான் நீர் நடக்க வேண்டும்” என்று சீறுவார்.
“நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி, நல்லதைச் செய்யச் சொல்வதுதானே அமைச்சரின் வேலை?” என்று அறிவொளி சமாதானமாகச் சொல்வார்.
ஒருநாள் அரண்மனை ஜோதிடரிடம், “நம்ம நாட்டில் பஞ்சம் அதிகமாயிருக்கிறதே... இதற்கு என்ன செய்யலாம்?” என்று ராஜா கேட்டார்.
ஜோதிடர் யோசித்தார். அருகிலிருந்த அமைச்சர், “அரசே, பஞ்சம் தீர வேண்டுமானால், விவசாயத்தைப் பெருக்க வேண்டும். குளம் குட்டைகளிலே தண்ணீர் தங்குகிற மாதிரி ஆழமாக வெட்ட வேண்டும்...” என்றார்.
முன்கோபி ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “அட, என்னைவிட அறிவாளியா நீர்? உமது தலையும் என் தலையும் ஒரே அளவுதானே இருக்கின்றன. உமக்கு மட்டும் எப்படி அறிவு அதிகமாக இருக்க முடியும்?” என்று கேட்டார்.
“அரசே, இனியும் நான் தங்களிடம் வேலை செய்ய விரும்பவில்லை. இன்றே என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறிவிட்டு, வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிட்டார் அறிவொளி.
“இவர் போனால் என்ன? இவரைவிட பெரிய மூளை உள்ளவரை நியமித்துக் காட்டுகிறேன். மண்டை பெரிதாக இருந்தால், நிச்சயம் மூளையும் பெரிதாக இருக்கும். மூளை பெரிதாக இருந்தால் நிச்சயம் அறிவும் நிறைய இருக்கும்” என்று சொல்லிக்கொண்டார் ராஜா.
மறுநாள் நாடு முழுவதும் தண்டோரா போடச் சொன்னார்.
“இதனால் அறிவிப்பது என்னவென்றால், யார் யாருக்கு மண்டை பெரிதாயிருக்கிறதோ, அவர்கள் எல்லாம் வருகிற வெள்ளிக்கிழமை அரண்மனை மண்டபத்துக்கு வந்துவிட வேண்டும். அவர்களில் ஒருவரை நம் ராஜா, அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்...”
இந்த அறிவிப்பைக் கேட்டதும், தலை பெரிதாயிருக்கிறவர்கள் எல்லாம் அரண்மனையை நோக்கி வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார்கள்.
ஒவ்வொருவர் தலையையும் சணலால் அளந்து, அந்த அளவுக்குச் சணலைத் தனித் தனியாக வெட்டினார் ராஜா. வெட்டிய துண்டுகளை ஒரு மேஜை மேல் வைத்தார். பிறகு, எது மிகவும் நீளமானது என்று பார்த்தார். எல்லாவற்றையும்விட ஒன்று மிக நீளமாக இருந்தது.
“ஆ... இந்த அளவு தலைக்காரர்தான் இனி என்னுடைய அமைச்சர்” என்று குதித்தார். ஆனால், அந்த அளவு யாருடையது என்றுதான் தெரியவில்லை. அதனால் அவர் அந்தச் சணலை எடுத்து, ஒவ்வொருவர் தலையிலேயும் வைத்துப் பார்த்தார். 41வது ஆளுக்கு அது சரியாக இருந்தது. உடனே அவரையே அமைச்சராக்கிவிட்டார்.
அந்த மண்டை பருத்த அமைச்சரிடம், “நம் நாட்டில் பெரும்பாலோர் எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நன்றாகக் கொழுகொழுவென்று ஆக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டார் ராஜா.
“கொழு கொழுவென்று இருக்கிறவர்களை எல்லாம் வரவழைப்போம். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து காரணம் கேட்போம். அவர்கள் கலந்து ஆலோசித்துச் சொல்லட்டும்” என்றார் அமைச்சர்.
ராஜா உடனே தண்டோரா போடச் சொன்னார்.
அந்த நாட்டிலேதான் பஞ்சமாயிற்றே. தொந்தி பருத்த ஆள் கிடைக்கவே இல்லை. பக்கத்து நாடுகளில் இருந்து உடல் பருத்தவர்கள் 17 பேர் அரண்மனைக்கு வந்தார்கள்.
“அமைச்சரே, சணல் கயிறு எங்கே? இவர்களது தொந்திகளை அளந்து பார்ப்போம்” என்றார் ராஜா.
“அரசே, என் கைகளால் அவர்களின் தொந்திகளைக் கட்டிப் பிடித்தே கண்டுபிடித்து விடுவேன்” என்று சொன்ன அமைச்சர், அதைச் செய்தும் காண்பித்தார்.
“நீர் பெரிய மூளைக்காரர் என்பதை நிரூபிக்கிறீர்” என்று மகிழ்ந்தார் ராஜா.
அவர்களில் பெரிய தொந்திக்காரர் ஐவரைத் தேர்ந்தெடுத்து அரண்மனை மண்டபத்தில் தங்கச் சொன்னார் ராஜா. எப்படி மக்கள் அனைவரையும் கொழுகொழுவென்று ஆக்குவது என அவர்கள் கலந்து பேசி, ஆலோசனைகளைக் கூறவேண்டும் என்று உத்தரவு போட்டார்.
பெரிய தொந்திக்காரர்கள் ஐவரும் நன்றாகச் சாப்பிட்டார்கள்; நன்றாகத் தூங்கினார்கள்.
இப்படி ஒரு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் அரண்மனைத் தலைமைச் சமையல்காரர் ஓடிவந்து, “மகாராஜா, அரிசி, பருப்பெல்லாம் தீர்ந்துவிட்டது. ஒரு மாதத்துக்கு வாங்கி வைத்ததை ஒரே வாரத்திலே அந்த ஐந்து பேரும் சாப்பிட்டுவிட்டனர்” என்று முறையிட்டார்.
உடனே ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. மண்டபத்துக்குச் சென்றார். குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, “என்ன முடிவு செய்தீர்கள்?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அவர்கள் நடுநடுங்கியபடி நின்றார்கள். ராஜாவின் கோபம் அதிகமாகிவிட்டது.
“உங்கள் தொந்திகளைக் கலக்குகிறேன் பாருங்கள்” என்று முன்கோபி ராஜா இரண்டு கைகளில் உள்ள விரல்களையும் மடக்கிக் கொண்டு வந்தார். ஐவரும் அலறியடித்து அரண்மனையைவிட்டு ஓடினார்கள்.
உடனே அவர் மண்டை பருத்த அமைச்சரை அழைத்து வரச் சொன்னார்.
“பஞ்சம் போக வழி கேட்டால், பஞ்சம் அதிகமாக வழி சொல்லிவிட்டீரே! அந்த ஐந்து பேரும் அரண்மனை உணவுப் பொருள்களை ஏப்பம் விட்டுவிட்டார்கள். அவர்களிடமிருந்து ஒரு யோசனையும் வரவில்லை. இதற்காகவா உம்மை அமைச்சர் ஆக்கினேன்?” என்று கத்தினார் முன்கோபி ராஜா.
“ஐயோ, ஆளை விடுங்கள்” என்று அவரும் ஓடிவிட்டார்.
முன்கோபி ராஜா பழைய அமைச்சர் அறிவொளியை அழைத்து வரச் சொல்லி, அவரையே மீண்டும் அமைச்சராக்கிவிட்டார்.
“அரசே, சாதாரண மனிதனுடைய கோபம் அவனுடைய மனைவி, குழந்தைகள், அக்கம் பக்கத்திலுள்ளவர்களைத்தான் பாதிக்கும். ஆனால், தாங்களோ ஒரு ராஜா. உங்கள் கோபம் இந்த நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களையும் பாதிக்கும். ஆகையால், கோபம் கூடாது” என்றார்.
அன்று முதல் ராஜா முன்கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டார்.