பூமி என்னும் சொர்க்கம் 13: கடலில் எவ்வளவு ஆழம் செல்லலாம்?

பூமி என்னும் சொர்க்கம் 13: கடலில் எவ்வளவு ஆழம் செல்லலாம்?
Updated on
2 min read

தொலைக்காட்சியில் ஒருவர் முதுகில் காற்று சிலிண்டரை மாட்டிக்கொண்டு கடலுக்குள் மேலும் கீழுமாக நீந்தி மீன்களைப் படம் எடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதைப் பார்க்கும்போது நாமும் அப்படிக் கடலில் நீந்த மாட்டோமா என்று ஆசை ஏற்படும்.

கடலில் சில அடி ஆழம் வரை செல்வதானால் பயிற்சி எதுவும் தேவையில்லை. ஆனால் மேலும் மேலும் ஆழத்துக்கு இறங்குவதானால் கட்டாயம் பயிற்சி தேவை. அத்துடன் பல விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். காற்றின் எடையும் நீரின் எடையும் இதற்குக் காரணம்.

நம் தலைக்கு மேலே உள்ள காற்றானது நம்மை நாலாபுறங்களிலுமிருந்து சதுர சென்ட்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்திக்கொண்டிருக்கிறது. பிறந்தது முதல் நாம் இதற்குப் பழகி விட்டோம் என்பதால் இந்த அழுத்தத்தை நாம் உணருவதில்லை. இதைக் காற்றழுத்தம் என்பார்கள்.

தண்ணீருக்கு எடை உண்டு என்பதை நாம் அறிவோம். நீருக்குள் இறங்கும்போது காற்றின் எடையுடன் நீரின் எடையும் சேர்ந்து நம்மை அழுத்த ஆரம்பிக்கும். கடலில் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் அழுத்தம் தரையில் உள்ளதைப்போல் இரண்டு மடங்காகிவிடும். 20 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் அழுத்தம் மூன்று மடங்காகிவிடும். 30 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் அழுத்தம் நான்கு மடங்காகிவிடும். அழுத்தம் இப்படி அதிகரித்துக் கொண்டே போகும்.

மிக ஆழத்துக்கு இறங்கினால் மனிதனால் அழுத்தத்தைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அழுத்தம் தாங்காமல் நசுங்கி இறந்து விடுவான்.

கடலின் ஆழத்தில் இறங்குவதில் வேறு பிரச்சினைகளும் உண்டு. குறைந்த ஆழத்தில் இருப்பதானால் முதுகில் கட்டிக்கொண்டுள்ள சிலிண்டரிலிருந்து கிடைக்கும் காற்றின் அழுத்தம் சாதாரணமாக இருந்தால் போதும். மேலும் ஆழத்தில் இறங்கும்போது அந்த ஆழத்தில் இருக்கின்ற அழுத்தத்தில் காற்றை சுவாசிக்க வேண்டும். அதற்கான வகையில் சிலிண்டரிலிருந்து அதிக அழுத்தத்தில் காற்றைப் பெறவேண்டும். இப்படி மாற்றிக்கொள்ள சிலிண்டரில் ஏற்பாடு உண்டு.

கடலுக்கு வெளியே ஒருவர் சுவாசிக்கும்போது நுரையீரலானது காற்றில் அடங்கிய ஆக்சிஜன் வாயுவை மட்டும் எடுத்துக் கொள்ளும். காற்றில் அடங்கிய நைட்ரஜன் வாயு உட்பட பிற வாயுக்கள் வெளி மூச்சுடன் வெளியே வந்துவிடும். ஆனால் கடலுக்குள் ஆழத்தில் இறங்கும்போது சிலிண்டரில் உள்ள காற்றில் அடங்கிய நைட்ரஜன் வாயுவும் ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். அப்படிக் கலப்பதால் உடனடியாக ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடாது.

கடலில் நல்ல ஆழத்தில் செயல்படுகிற ஒருவர் திடீரென மேலே வர முற்பட்டால் ஆபத்து. ரத்தத்தில் கலந்துள்ள நைட்ரஜன் வாயுவானது கொப்புளங்களாக வெளிப்பட்டு பெரும் பிரச்சினையை உண்டாக்கும். ரத்தத்தில் வாயுக் கொப்புளங்கள் இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே அவர் கொஞ்சம் உயரே வந்து அங்கே சிறிது நேரம் தங்கி இருக்க வேண்டும். பிறகு இன்னும் கொஞ்சம் மேலே வந்து அங்கு கொஞ்ச நேரம் இருக்க வேண்டும்.

இப்படிப் படிப்படியாக மேலே வந்தால் ரத்தத்தில் அடங்கிய நைட்ரஜன் வாயு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடும். பிரச்சினை இருக்காது. அப்படியின்றி அவர் உடனே மேலே வருவதாக இருந்தால், அழுத்தக் குறைப்புக் கூண்டுக்குள் பல மணி நேரம் தங்கி விட்டுப் பிறகு வெளியே வரவேண்டும். அழுத்தக் குறைப்பு கூண்டுக்குள் படிப்படியாக அழுத்தத்தைக் குறைக்கிற ஏற்பாடு இருக்கும்.

கடலின் ஆழத்தில் இறங்குவதில் நிபுணரான நுனா கோம்ஸ் 2005-ம் ஆண்டில் 318 மீட்டர் ஆழம் வரை இறங்கி உலக சாதனை படைத்துள்ளார். இதைச் சாதிக்க அவருக்குப் பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. எனவே கடலில் ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு இறங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். கடல்களின் சராசரி ஆழம் சுமார் மூன்றரை கிலோ மீட்டர். கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் சேலஞ்சர் மடு என்ற இடத்தில் உள்ளது.. அங்கு ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in