

முல்லைக்காட்டு விலங்குகள் அனைத்தும் அங்கே கூடியிருந்தன. சிங்கராஜா ஒரு மரத்தடி மேடையில் அமர்ந்திருந்தது. குரங்கும் மானும் முயலும் தொடுத்த வழக்கை விசாரிக்கத்தான் அந்தக் கூட்டம்.
குரங்கின் சர்க்கரைவள்ளிக் கிழங்குத் தோட்டம், மானின் வெள்ளரிக்காய்த் தோட்டம், முயலின் கேரட் தோட்டம் அனைத்துமே விளைச்சலுக்குத் தயாராக இருந்தன. ஆனால், சில நாள்களாகக் கிழங்குகளும் வெள்ளரிக்காய்களும் கேரட்களும் களவாடப் பட்டுக் கொண்டிருந்தன. தோட்டங்களும் சேதமாகிக் கொண்டிருந்தன.
திருடர்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியாத நிலையில், குரங்கும் மானும் முயலும் இரவுக் காவல்புரியும் கரடியிடம் இது பற்றித் தெரிவித்தன. கரடி தன் படைவீரர்களுடன் தோட்டத்தில் காத்திருந்தது. கரடிப் படையினரிடம் பன்றித் திருடர்கள் பிடிபட்டனர்.
“எங்கள் காட்டில் வறட்சி நிலவுகிறது. உண்பதற்கு எதுவுமே கிடைக்க வில்லை. அதனால்தான் நாங்கள் முல்லைக்காட்டுக்கு வந்து கிழங்குகளையும் வெள்ளரிக்காய்களையும் திருடித் தின்றோம். எங்களை விட்டுவிடுங்கள். இனி இந்தப் பக்கமே வரமாட்டோம்” என்றன பன்றிகள்.
“திருடர்களே, எதுவானாலும் உங்களை விட முடியாது. உங்களுக்கான தண்டனையை எங்கள் சிங்கராஜா தீர்மானிப்பார். நீங்கள் அங்கே வந்து பேசிக்கொள்ளுங்கள்” என்றது கரடி.
குற்றம் செய்த பன்றிகளுக்கு என்ன தண்டனை தரலாம் என்பதற்காகவே இப்போது சிங்கராஜாவின் தலைமையில் விசாரணைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சிங்கராஜா, “நண்பர்களே, பக்கத்துக் காட்டிலுள்ள இந்தப் பன்றிகள் நம் காட்டிலுள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட் தோட்டங்களில் திருடித் தின்றதுடன் தோட்டத்தையும் நாசம் செய்திருக்கின்றன. இந்தக் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை தரலாம் என்று சொல்லுங்கள். சிறந்த தண்டனையைச் சொல்பவருக்குப் பரிசு உண்டு” என்றது.
பரிசுக்கு ஆசைப்பட்டு பல விலங்குகளும் பன்றிகளுக்கான தண்டனை பற்றிச் சொல்ல முன்வந்தன.
முதலில் நரி வந்து, “அரசே, தோட்டத்தையே நாசம் செய்த பன்றிகளுக்கு நூறு கசையடிகள் கொடுக்கலாம்” என்றது.
“நரியாரே, கசையடிகள் கொடுத்துவிடலாம். அதனால் யாருக்கு என்ன பயன்?” என்று கேட்டது சிங்கராஜா.
“இனி யாருமே திருட மாட்டார்கள் அல்லவா? அதுவே பயன்தானே?”
“அகப்படுகிற திருடன்தான் தண்டனைக்குப் பயப்படுவான். அகப்படாமலேயே திருடத் தெரிந்தவன் தண்டனைக்குப் பயப்பட மாட்டான் நரியாரே. வேறு தீர்ப்பு யோசித்துச் சொல்லுங்கள்” என்றது சிங்கராஜா.
அடுத்து சிறுத்தை, “அரசே, பன்றிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதுதான் சரியாக இருக்கும்” என்றது.
“மரண தண்டனை எப்படிச் சிறந்த தண்டனையாகும் சிறுத்தையாரே?”
“தங்களுக்குச் சுவையான உணவு கிடைக்கும் அரசே” என்றது சிறுத்தை.
“சிறுத்தையாரே, எனக்கான பயனை மட்டுமே சொல்கிறீர். ஒரு அரசன் அப்படிச் சுயநலமாக இருக்கலாமா? இது சரியல்ல” என்றது சிங்கராஜா.
புலி, “அரசே, இந்தப் பன்றிகளைச் சிறையில் அடைத்துவிட்டால், இனி யாருடைய தோட்டங்களும் சேதம் அடையாது” என்றது.
“புலியாரே, பன்றிகளைச் சிறையில் அடைத்துவிடலாம். ஆனாலும், அவற்றைப் பட்டினி போட முடியாது அல்லவா? சிறையில் பன்றிகளுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கும் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்?” என்று சிங்கராஜா கேட்டது. புலி அமைதியாகப் பின்னால் சென்றுவிட்டது.
‘அரசரின் எதிர்பார்ப்புதான் என்ன?’ என்று விலங்குகள் பேசிக்கொண்டன.
அப்போது யானை, “அரசே, இந்தப் பன்றிகளைச்சிறையில் அடைக்கவும் வேண்டாம். அவற்றுக்குக்கசையடியோ மரண தண்டனையோ கொடுக்கவும் வேண்டாம். நம் காட்டிலேயே வேலை கொடுப்போம்.இந்தப் பன்றிகள் தங்கள் வலிமையான கொம்பு களால்தாம் மண்ணைக் கிளறி கிழங்குகளையும் கேரட்டுகளையும் தோண்டி எடுத்துத் தின்றிருக்கின்றன. வெள்ளரிக் கொடிகளையும் நாசம் செய்திருக்கின்றன. அதனால் அந்தக் கொம்புகளாலேயே இனி அவை நம் காட்டுக்கு நன்மை செய்ய வேண்டும். அதாவது விவசாயம் செய்பவர்களின் நிலத்தை இந்தப் பன்றிகளே தங்கள் கொம்புகளால் உழுது கொடுக்க வேண்டும். அதற்கான கூலியாகப் பன்றிகளுக்கு உணவு வழங்கப்பட வேண்டும். இனி இந்தப் பன்றிகளை நம் காட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதிக்கலாம்” என்று சொன்னது.
சிங்கத்தின் முகம் மலர்ந்தது.
“ஆஹா, யானை சொன்ன தண்டனையே சிறந்தது. இதுதான் எல்லாருக்குமே பயன்தரக்கூடியது. தவறு செய்தவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை அவரைத் துன்புறுத்துவதாக மட்டும் இருந்தால் யாருக்கும் பயன் இல்லை. ஒரு குற்றவாளிக்கு நாம் கொடுக்கும் தண்டனையால் அந்தக் குற்றவாளிகூட நன்மை பெற வேண்டும். அவர் பின்னாளில் தவறு ஏதும் செய்யாமல் நல்லவராக வாழ வேண்டும். யானை சொன்ன இந்தத் தீர்ப்பு குற்றம் செய்த பன்றிகளுக்கும் நன்மை செய்யும். இதைப் பார்க்கும் மற்றவர் மனங்களிலும் உழைத்து உண்ண வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். அதனால், இந்தப் பன்றிகளை இனி நம் காட்டில் விவசாயப் பணிகளில் அமர்த்துவோம்” என்ற சிங்கராஜா, யானைக்கு ஒரு கட்டு கரும்பு பரிசாகக் கொடுத்தது.
சிங்கராஜாவின் உத்தரவை அனைத்து விலங்குகளும் ஏற்றுக்கொண்டன. பன்றிகளும் நன்றி தெரிவித்தன.
- கீர்த்தி