

புயலும் சூறாவளியும் ஒன்றா, டிங்கு?
- ப. கோகுல், 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
புயலுக்கும் சூறாவளிக்கும் அதிக வேறுபாடு இல்லை. வட அட்லாண்டிக் கடலிலும் வடகிழக்கு பசிபிக் கடலிலும் உருவாகும் சூறாவளியை ‘ஹரிகேன்’ என்று அழைக்கிறார்கள். இதில் மணிக்கு 119 - 153 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். ஹரிகேன்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள சூடான கடல் நீரில் மட்டுமே உருவாகின்றன. வடமேற்கு பசிபிக் கடலில் வீசும் சூறாவளியை ‘டைபூன்’ என்று அழைக்கிறார்கள். இதில் மணிக்கு 118 - 148 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். டைபூனால் அதிகம் பாதிக்கப்படுவது பிலிப்பைன்ஸும் ஜப்பானும்தான். காற்றின் வேகத்தைப் பொறுத்து ‘டைபூன்’, ‘சூப்பர் டைபூன்’ என்றெல்லாம் பிரித்திருக்கிறார்கள். தென் பசிபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் வீசும் காற்றுக்குப் ‘புயல்’ என்று பெயர். இதில் மணிக்கு 30 - 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கோகுல்.
குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு போன்றவற்றைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாமா, டிங்கு?
- எம். முகமது ஃபாதில், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.
என்றாவது ஒருநாள் சோப்புகளைத் தலையில் தேய்ப்பதால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால், அடிக்கடி சோப்புகளைத் தேய்ப்பதால் தலைமுடிக்குப் பாதிப்பு ஏற்படலாம். குளியல் சோப்பு தோலுக்கு ஏற்ற மாதிரியும் துணி சோப்பு துணியின் அழுக்கை நீக்குவதற்கு ஏற்ற மாதிரியும் ரசாயனங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் தலையில் தேய்த்துக் குளிக்கும்போது, முடிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வறண்டு போகலாம், உதிர்ந்து போகலாம். அதனால், தலைக்குத் தேய்ப்பதற்காகவே உள்ள சிகைக்காய், ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்துவதே நல்லது, முகமதி ஃபாதில்.
இரவு நேரத்தில் நகம் வெட்டக் கூடாதா, டிங்கு?
- வி. பிரான்சிஸ்கா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர்.
மின்சார விளக்கு இல்லாத காலத்தில் குறைவான வெளிச்சம்தான் இருக்கும். நகங்களை வெட்டும்போது தரையில் விழுந்தால் எடுப்பது கடினம். வெட்டப்பட்ட நகங்கள் காலில் குத்தலாம், குழந்தைகள் எதையாவது வாயில் போடும்போது உள்ளே சென்றுவிடலாம். அதனால், பகலில் நகம் வெட்டுவது நல்லது என்பதற்காகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இரவில் நல்ல வெளிச்சம் இருப்பதால் நகங்களை வெட்டி குப்பையில் போட்டுவிடலாம், பிரான்சிஸ்கா.