

நீங்கள் சாலையில் நடந்து செல்கிறீர்கள். திடீரென்று பாம்பு உங்களைத் துரத்துகிறது. தடுக்கிக் கீழே விழுகிறீர்கள். திடுக்கிட்டு எழுந்தால் கனவு. பரிசு வாங்குவதுபோல், மாடியில் இருந்து விழுவதுபோல், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதுபோல் பல கனவுகள் வருகின்றன. தூங்கும்போது நம் மூளை நான்கு வகைப் படிநிலைகளுக்குள் செல்கிறது. இதில் விரைவான கண் அசைவுத் தூக்கம் (Rapid Eye Movement) என்கிற நிலைக்குச் செல்லும்போது கனவு வருகிறது.
கனவில் ஏதேதோ விநோதமான காட்சிகள் வருகின்றன. சில கனவுகள் நம்மை மகிழ்விக்கின்றன. சில கனவுகள் குழப்புகின்றன. சில கனவுகள் நம்மைப் பயமுறுத்துகின்றன. உண்மையில் கனவுகள் ஏன் வருகின்றன? கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் தேடிவருகின்றனர். பண்டைய காலத்தில் கனவுகள் ரகசியச் செய்திகளைச் சுமந்துவருவதாக நம்பினர். 20ஆம் நூற்றாண்டில் இருந்துதான் கனவை அறிவியல்பூர்வமாக ஆராய ஆரம்பித்தனர்.
மனநல மருத்துவத்தின் தந்தை என அறியப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு, ஆழ்மன ஆசைகளே கனவாக வெளிப்படுகின்றன என்றார். ஃபிராய்டின் ஆய்வுகள் கனவைப் புரிந்துகொள்வதற்குத் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. ஃபிராய்டைப் பின்பற்றி வந்த கார்ல் யுங், ‘கனவு இரண்டு முக்கியச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்று, மனிதர்கள் மனதுக்குள் புதைந்திருக்கும் கேள்விகளுக்குக் கனவின் மூலம் விடை காணப்படுகிறது. மற்றொன்று, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்கள் குறித்த குறிப்புகள் கனவில் இடம்பெற்றுள்ளன’ என்றார்.
நவீன அறிவியல் ஃபிராய்டு, யுங் இருவரின் பார்வைகளில் இருந்து முன்னேறி வந்துவிட்டது. கனவு என்பது ரகசியச் செய்தி என்பதைத் தாண்டி, உண்மையில் அதன் பயன் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம்.
நமக்கு வேண்டிய தகவல்களை நீண்ட கால நினைவாற்றலில் (Long Term Memory) சேமித்துவைக்கக் கனவு உதவுகிறது. ஒரு நிகழ்வு நடைபெறும்போது அப்போதைக்கு அந்தத் தகவல் மூளையில் உள்ள குறுகிய கால நினைவாற்றலில் (Short Term memory) தங்கும். இந்தக் குறுகிய கால நினைவு எளிதில் மறைந்துவிடக் கூடியது. அந்தத் தகவலை நாம் நீண்ட காலத்துக்கு நினைவில் வைக்க வேண்டும் என்றால், அதை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப் பார்க்க வேண்டும். இந்த வேலையைத்தான் கனவு செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஒருவர் கனவு கண்ட பிறகு அவரது மூளையில் தோன்றும் அலைவரிசைகளும், ஒரு தகவலை நினைவுபடுத்தும்போது ஏற்படும் அலைவரிசைகளும் ஒரே வகையில் அமைந்துள்ளன. அதனால், கனவு என்பது நாம் அன்றாட வாழ்வில் பெறும் அனுபவங்களை, கற்றுக்கொள்ளும் திறன்களை நீண்ட காலத்துக்கு நினைவு வைத்துக்கொள்வதற்காக (நீண்ட கால நினைவில் சேகரித்து வைப்பதற்காக) மூளை செய்யும் மறு உருவாக்கச் செயல்பாடு என்று அறியப்படுகிறது.
சரி, கனவுகள் பயனுள்ளவை என்றால் ஏன் கெட்ட கனவுகள், நம்மைப் பயமுறுத்தும் கனவுகள் வர வேண்டும்? இதற்குப் பரிணாமம் சார்ந்த பதில் சொல்லப்படுகிறது. மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தபோது தினசரி ஆபத்துகளைச் சந்திக்க நேர்ந்தது. அந்த ஆபத்துகளைப் புரிந்துகொண்டு தப்பிக்கும் வழியைக் கண்டறிய கனவு உதவி யிருக்கிறது. பாதுகாப்பான சூழலில் இருக்கும்போது கனவின் மூலம் ஆபத்தான காட்சிகளை மனதில் உருவாக்கி, அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறையைக் கண்டறிய மூளை முயல்கிறது (Threat-Simulation).
நவீன காலத்தில் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இல்லை. ஆனால், பல நெருக்கடி களுக்கு மத்தியில் சமூகத்துடன் இணக்கமாக வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தச் சூழலை நாம் கனவின் மூலம் புரிந்துகொள்கிறோம், பழகிக்கொள்கிறோம். அதனால்தான் சக மனிதர்களிடம் நம்மால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளைக் கனவில் வெளிப்படுத்துகிறோம் (Social Simulation).
நாம் பிழைத்திருக்க நம்மைச் சுற்றி இருக்கும் உலகைக் கண்களின் மூலமாகவே புரிந்துகொள்கிறோம். இதற்கு மூளையில் உள்ள பார்வைப் புறணி (Visual Cortex) எனும் பகுதி பயன்படுகிறது. மின்சாரம் கண்டறியப்படும் வரை மனிதர்கள் இருளில்தான் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டனர். அதனால் நம் மூளையின் பார்வைப் புறணி பயன்பாடும் குறைவாக இருந்துள்ளது. அந்தப் பகுதியை நாம் அதிகம் பயன் படுத்தவில்லை என்றால் அங்குள்ள நரம்பணுக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும். அதனால், கனவு ஒன்றை உருவாக்கி, பார்வைப் புறணிப் பகுதியை இருளிலும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்வதற்குப் பரிணாமம் உதவியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சில நேரம் தீர்க்க முடியாத சிக்கல்களுக்கான தீர்வு களைக்கூடக் கனவுகளின் மூலம் கண்டடைகிறோம். மாணவர்கள் தூங்குவதற்கு முன் பாடப் புத்தகத்தில் இருக்கும் கேள்விகளுக்கு விடை தேட முயன்றால், தூங்கி எழுந்தவுடன் அதற்கான விடையைக் கண்டடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரணம், கனவின்போது நம் மூளை எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சிந்திக்கிறது. தர்க்கங்களுக்கு உள்படாமல் நம் மூளை இயங்குவதால் படைப்பாற்றல் அதிகரித்துத் தீர்வையும் கண்டடைகிறது.
இன்று கனவுகள் குறித்த பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், இன்னும் மனித மூளையும் அதன் இயக்கமும் புரிந்துகொள்ளப்படாத புதிராகவே இருக்கின்றன. அதற்கான விடையை அறிவியல் தேடிக்கொண்டே இருக்கிறது. யாருக்குத் தெரியும், அந்தப் புதிருக்கான விடையும்கூட கனவின் மூலமே நமக்கு வந்தடையலாம்!
(விடைகளைத் தேடுவோம்)