கதை: இது யாருடைய கிளி?

கதை: இது யாருடைய கிளி?
Updated on
2 min read

மணிக்குத் தூக்கமே வரவில்லை. காலையிலிருந்து கிளியைக் காணவில்லை. கிளி இருக்கும் இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டான். ‘ராஜா’ என்று மணியின் குரல் கேட்டவுடன் எங்கிருந்தாலும் பறந்து வந்துவிடும். இன்று காலை வழக்கம்போல் கூண்டிலிருந்து கிளியை வெளியே கொண்டுவந்தான். கொட்டை பருப்புகளையும் மிளகாய்ப் பழத்தையும் கொடுத்தான். ஆசையாகக் கொத்தித் தின்றது கிளி. சிறிது நேரம் சுதந்திரமாக இருக்கட்டும் என்று நினைத்த மணி, அம்மா அழைக்கும் குரல் கேட்டு வீட்டுக்குள் சென்றான். திரும்பி வந்து பார்த்தால் கிளியைக் காணவில்லை.

மணிக்கு அழுகை வந்துவிட்டது. அம்மாவால் அவனைச் சமாதானம் செய்ய முடியவில்லை. சத்தம் கேட்டு அப்பா வந்தார். நடந்ததைச் சொன்னான் மணி. “நீ பத்து நாளைக்கு முன்னால அடிபட்டுக் கிடந்த கிளியை எடுத்துட்டு வந்தே... அப்பவே என்ன சொன்னேன்? பறவைகளைக் கூண்டுக்குள் வச்சு வளர்க்கக் கூடாது. உடல்நிலை சரியானதும் பறக்க விட்டுடணும்னு சொன்னேன் இல்லையா? இப்ப அதுவாகவே பறந்து போயிருச்சு. நல்லது. பள்ளிக்குக் கிளம்பு மணி” என்று அப்பா சொன்னார்.
“அது என்னோட கிளிப்பா...”

“பத்து நாளைக்கு முன்னால அது எங்கே இருந்ததோ? எப்படி உன்னோட கிளின்னு சொல்ல முடியும்?” மனமின்றிப் பள்ளிக்குக் கிளம்பினான் மணி. பள்ளி செல்லும் வழியிலும் வீட்டுக்குத் திரும்பி வரும் வழியிலும் கிளியைத் தேடினான். கண்ணில் படவேயில்லை. ன்கு நாள்களாகச் சோர்ந்திருந்த மணி, “அப்பா, நாலு தெரு தள்ளி ஒரு கொடுக்காய்ப்புளி மரம் இருக்கு. கிளிக்கு அந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும். ஒருவேளை நம்ம ராஜா அங்கே போயிருக்குமோ? வாங்கப்பா போய்ப் பார்க்கலாம்” என்று நச்சரித்தான்.வேறு வழியின்றி மணியை அழைத்துக்கொண்டு அந்தக் கொடுக்காய்ப்புளி மரத்தடிக்கு வந்து சேர்ந்தார் அப்பா.

உச்சிக் கிளைகளில் கொடுக்காய்ப்புளிகள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன. தரையிலும் விழுந்து கிடந்தன. கிளியை நெருங்கிவிட்டோம் என்கிற உள்ளுணர்வு மணிக்கு அதிகமானது. மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு கிளியின் குரல் எங்கிருந்தோ வந்தது.
“அப்பா, இது என் ராஜாதான். இங்கதான் இருக்குப்பா. எனக்கு அந்தக் கிளி வேணும்ப்பா.”
“சத்தம் மரத்திலிருந்து வரல மணி. எதிர் வீட்டிலிருந்து வருது.”
“வாங்கப்பா போகலாம்.”

இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றனர். அந்த வீட்டுக்காரர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள். அப்போது ஒரு சிறுவனின் தோள்மீது அமர்ந்துகொண்டு வந்த ராஜா, மணியைப் பார்த்ததும் இறக்கைகளை அடித்துக்கொண்டு வேகமாகப் பறந்து வந்து, மணியின் தோளில் அமர்ந்தது.

“பார்த்தீங்களா, இது என் மகனின் கிளி. நாலு நாள் பார்க்கலைன்னாலும் நினைவு வச்சிருக்கு” என்றார் மணியின் அப்பா.
“இந்தக் கிளியை அன்பளிப்பாக ஜானுக்குக் கொடுத்தான் என் நண்பன். பதினைந்து நாள்களுக்கு முன்னால இது காணாமல் போயிருச்சு. தேடித் தேடி அலுத்துட்டோம். நாலு நாளைக்கு முன்னால கொடுக்காய்ப்புளி மரத்துக்கு வந்தது. அப்படியே ஜானைப் பார்த்ததும் வீட்டுக்குள் வந்திருச்சு. இது எங்க கிளிங்க” என்றார் ஜானின் அப்பா.

“இல்லை, இது என்னோட ராஜா.”
“இல்லை, இது என்னோ டீனு.”
“மணி, இது அவங்க கிளி. அடிபட்டதால நீ எடுத்துட்டு வந்து சிகிச்சை கொடுத்து, காப்பாத்தியிருக்கே. அதுக்காக அதை நீ உரிமை கொண்டாடக் கூடாது.”
“இல்லப்பா, இது என்னோட ராஜா.”
“இல்ல, இது என்னோட டீனு. உடம்பு சரியானதும் என்னைத் தேடி வந்ததிலிருந்தே தெரியலையா?”
“நான் சொல்லும் யோசனையை இருவரும் கேட்பீர்களா?” என்று கேட்டார் மணியின் அப்பா.
“என்ன யோசனை?” என்றான் ஜான்.
“கிளியைக் கூண்டுக்குள் விடுவோம். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கிளி யார் கையில் வந்து உட்காருகிறதோ அவங்களுக்குதான் கிளி சொந்தம். சரியா?”
ஜானின் அப்பா சம்மதம் என்றார். மணியும் ஜானும் நம்பிக்கையுடன் கிளியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கூண்டின் கதவைத் திறந்தார் ஜானின் அப்பா. கிளி உற்சாகமாக வெளியே வந்து, ஜானையும் மணியையும் இரண்டு முறை சுற்றியது. பிறகு வேகமாகப் பறந்து சென்றுவிட்டது.
ஜானுக்கும் மணிக்கும் ஏமாற்றமாகிவிட்டது.
“இதில் வருத்தப்பட எதுவும் இல்லை மணி, ஜான். கிளிக்கு என்ன தேவைன்னு நமக்குக் காட்டிவிட்டது. சுதந்திரம்தான் கிளியோட விருப்பம். இதை நீங்க ஏத்துக்கணும்” என்றார் மணியின் அப்பா.
ஜானிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான் மணி. தூரத்தில் கிளியின் குரல் கேட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in