Published : 25 Oct 2017 10:53 AM
Last Updated : 25 Oct 2017 10:53 AM

டிங்குவிடம் கேளுங்கள்: 80 நாட்களில் உலகைச் சுற்றிவந்தவர் யார்?

‘80 நாட்களில் உலகப் பயணம்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அப்படி ஒரு பயணத்தை யாராவது நிஜமாகவே மேற்கொண்டிருக்கிறார்களா?

– சு. குருபிரசாத், 6-ம் வகுப்பு, கே.வி.எஸ். பள்ளி, விருதுநகர்.

பிரெஞ்சு எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்ன் எழுதிய ‘80 நாட்களில் உலகப் பயணம்’ என்ற நூல் 1873-ம் ஆண்டு வெளிவந்தது. அமெரிக்காவில் ‘நியூயார்க் வேர்ல்ட்’ என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்துவந்த நெல்லி ப்ளையிடம், நாவலைப்போல் நிஜத்திலும் 80 நாட்களில் உலகைச் சுற்றி வரும்படிக் கேட்டுக்கொண்டார் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்.

1889-ம் ஆண்டு தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார் நெல்லி ப்ளை. பயணத்தின் நடுவில் நாவலாசிரியர் ஜுல்ஸ் வெர்னையும் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். மொத்தம் 24,899 மைல் தூரத்தைக் கடந்து, 72 நாட்களிலேயே உலகை வலம்வந்துவிட்டார்! விமானம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் நெல்லி ப்ளை மேற்கொண்ட இந்த உலகப் பயணம் மிகப் பெரிய சாதனை! ஒரு பெண் தனியாக மேற்கொண்ட உலகப் பயணம் வரலாற்றில் நிலைத்துவிட்டது, குருபிரசாத்.

கிவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா டிங்கு?

- சி. மதுமிதா, திருப்பரங்குன்றம்.

நீங்கள் எந்தக் கிவியைப் பற்றிக் கேட்கிறீர்கள், மதுமிதா? கிவி என்ற பெயரில் ஒரு பறவையும் இருக்கிறது. ஒரு பழமும் இருக்கிறது. நியூஸிலாந்தின் தேசியப் பறவை கிவி. கோழி அளவுள்ள சிறிய பறவை. அலகு நீளமாக இருக்கும். பறக்க இயலாத பறவைகளில் இதுவும் ஒன்று. இரவு நேரத்தில் இரை தேடிச் செல்லும். பழுப்பு தோலும் பச்சை சதையும் சிறிய கறுப்பு விதைகளுமாக இருக்கக்கூடியது கிவி பழம். புளிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துகள் அதிகம் இருக்கின்றன. ஆனால், விலைதான் அதிகம். சீனா, சிலி, நியூஸிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் விளைகின்றன.

25CHSUJ_TINKU4rightகாரல் மார்க்ஸ் வீடு எந்த நாட்டில் இருக்கிறது?
இப்போதும் பராமரிக்கப்படுகிறதா, டிங்கு?

– கற்பக நாயகி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

ஜெர்மனியில் ட்ரயர் நகரில் காரல் மார்க்ஸ் பிறந்த வீடு இருக்கிறது. இது இன்று காரல் மார்க்ஸ் அருங்காட்சியகமாகச் செயல்பட்டுவருகிறது. ஜெர்மனியின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 32 ஆயிரம் பேர் இந்த வீட்டைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள். 1851 முதல் 1856-ம் ஆண்டுவரை மார்க்ஸ், அவரது மனைவி ஜென்னி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசித்த வீடும் இன்று நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது, கற்பக நாயகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x