தாய்லாந்து நாடோடிக் கதை: மந்திரத்தில் காய்த்த மாங்காய்கள்!

தாய்லாந்து நாடோடிக் கதை: மந்திரத்தில் காய்த்த மாங்காய்கள்!
Updated on
2 min read

விடுமுறையைக் கழிப்பதற்காக அன்சீ தன் பாட்டி ஊருக்குச் சென்றுகொண்டிருந்தான். வழியில் பசியோடு இருந்த ஒருவரைச் சந்தித்தான். அவர் அன்சீயிடம் சாப்பிட ஏதாவது இருந்தால் தருமாறு கேட்டார்.

அன்சீக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உடனே தன்னிடம் இருந்த உணவையும் தண்ணீரையும் கொடுத்தான். அவர் நன்றி சொல்லிவிட்டு வேகமாகச் சாப்பிட்டார்.

ஒருவரின் பசியைப் போக்கிய மகிழ்ச்சியில் அன்சீ அங்கிருந்து புறப்பட்டான். உடனே அந்த மனிதர், அன்சீயின் கையைப் பிடித்து இழுத்தார்.

“நீ சிறியவனாக இருந்தாலும் இரக்கக் குணமுள்ளவன். நீயே ஏழை. ஆனாலும் எனக்கு உணவு கொடுத்தாய். உன்னுடைய இரக்கக் குணத்துக்காக நான் ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அது எப்போதாவது உனக்கு உதவும்” என்று சொல்லிவிட்டு மந்திரத்தை அவர் சொன்னார்.

பிறகு, “இந்த மந்திரத்தின் மூலம் பழங்கள் காய்க்காத காலத்தில்கூட எந்தப் பழத்தையும் பெற முடியும். அதற்கு எந்தப் பழம் வேண்டுமோ அந்த மரத்தடியில் மந்திரத்தைச் சொல்லி ஒரு பானைத் தண்ணீரை ஊற்றினால் போதும். ஆனால், நீ வாழ்க்கை முழுவதும் என்னை மறக்கக் கூடாது. தவறினால் மந்திரம் தன் சக்தியை இழந்துவிடும்” என்றார் அந்த மனிதர்.

அன்சீக்கு ஆச்சரியமாக இருந்தது, “நீங்கள் சொன்னதை நான் மறக்க மாட்டேன். உங்களை என் வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொள்வேன்” என்று கூறிவிட்டு, மகிழ்ச்சியாகப் பாட்டி ஊர் நோக்கிச் சென்றான்.

வழியில் ஒரு படைவீரர், “நம் அரசி மாங்காய் சாப்பிட விரும்புகிறார். ஆனால், இப்போது மாங்காய் காய்க்கும் பருவம் அல்ல. ஆனாலும் யாராவது மாங்காய் கொண்டு வந்து கொடுத்தால், அரசி பொன்னும் பொருளும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்” என்று அறிவித்துக்கொண்டே சென்றார்.

அறிவிப்பைக் கேட்ட ஒருவர், “அரசி ஆசைப்பட்டால், உடனே மரம் காய்த்துவிடுமா?” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அன்சீ மகிழ்ச்சியடைந்தான். உடனே வீரரிடம் சென்று, “என்னால் மாங்காய் தர முடியும். அரண்மனைத் தோட்டத்தில் மாமரம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

படைவீரர் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, தோட்டத்தில் இருந்த மாமரத்தைக் காட்டினார். அன்சீ பெரிய பானையில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னான். மந்திரத்தை உச்சரித்து, மரத்தடியில் தண்ணீரை ஊற்றினான். “நாளை வந்து பாருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அடுத்த நாள் மாமரத்தைப் பார்த்தபோது, மாங்காய்கள் காய்த்துக் குலுங்கின. அரசியால் இந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. சில மாங்காய்களைப் பறித்துச் சாப்பிட்டுப் பார்த்தார். மிகவும் சுவையாக இருந்தன. உடனே அன்சீயை அழைத்து வரச் சொன்னார்.

அரசியை வணங்கினான் அன்சீ.

“அற்புதத்தை நிகழ்த்திவிட்டாய்! உனக்குப் பொன்னும் பொருளும் தருவதோடு, இந்த நாட்டிலேயே தங்குவதற்கு ஒரு வீட்டையும் அளிக்கிறேன்” என்றார் அரசி.

ஒரே நாளில் அன்சீ பணக்காரனாகி விட்டான்! விஷயத்தைக் கேள்விப்பட்டு அன்சீயின் பெற்றோரும் பாட்டியும் அந்த நாட்டுக்கே வந்துவிட்டனர்.

சுற்றுலா சென்றிருந்த மன்னர் திரும்பிவந்தார். அவரிடம் மாமரம் காய்த்த அதிசயத்தைச் சொன்னார் அரசி. உடனே அன்சீயை அழைத்துவரச் சொன்னார் மன்னர்.

அரண்மனைக்கு வந்த அன்சீ மன்னருக்கு வணக்கம் தெரிவித்தான்.

“எப்படி இந்த மந்திர சக்தியைப் பெற்றாய்? யார் உனக்கு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தது?” என்று கேட்டார் மன்னர்.

“மன்னா, காட்டில் ஒரு துறவியிடம் இந்த மந்திரத்தைக் கற்றுக்கொண்டேன்” என்றான் அன்சீ.

“மகிழ்ச்சி. நீ செல்லலாம்” என்று அன்சீயை அனுப்பி வைத்தார் மன்னர்.

ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் அரசிக்கு மாங்காய் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. மரத்தில் ஒரு மாங்காய்கூட இல்லை. மன்னர் அன்சீயை அழைத்து வரச் சொன்னார்.

அன்சீயும் மகிழ்ச்சியோடு அரண்மனைக்கு வந்தான்.

“உன் மந்திரசக்தியால் மீண்டும் மாங்காய்களை உருவாக்கு” என்றார் மன்னர்.

மந்திரத்தை உச்சரித்து, மாமரத்துக்கு அடியில் தண்ணீர் ஊற்றினான் அன்சீ. ஆனால், அடுத்த நாள் மரத்தில் ஒரு காய்கூட உருவாகவில்லை. உடனே மன்னருக்குக் கோபம் வந்தது.

அன்சீ பயந்துவிட்டான்.

“உண்மையைச் சொல், மந்திரசக்தி எங்கே போனது?”

“மன்னா, எனக்கு ஒரு ஏழைதான் இந்த மந்திரசக்தியை வழங்கினார். அவர் பெயரைச் சொல்லாமல், துறவி என்று சொன்னதால் மந்திர சக்தி வேலை செய்யவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா” என்று பணிவுடன் சொன்னான் அன்சீ.

“ஒருவர் செய்த உதவியை எப்படி நீ மறக்கலாம்? தன்னை மறந்தால் மந்திர சக்தி மறையும் என்று அவர் சொன்ன பிறகும் ஏன் துறவி என்றாய்?”

“யாசகம் கேட்டவர் என்று சொன்னால், தாங்கள் என்ன நினைப்பீர்களோ என்றுதான் துறவி என்றேன். என் தவறை உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான் அன்சீ.

“மந்திர சக்தி கொடுத்தவரிடம்தான் நீ மன்னிப்பு கேட்க வேண்டும். உடனே என் நாட்டைவிட்டுக் கிளம்பு” என்றார் மன்னர்.

அன்சீ குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டான்.

- மாத்தளை சோமு

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in