Published : 07 Jun 2023 06:07 AM
Last Updated : 07 Jun 2023 06:07 AM

டிங்குவிடம் கேளுங்கள்: உடைந்த கண்ணாடியில் பல முகங்கள் தெரிவது ஏன்?

கண்ணாடியில் விரிசல்கள் விழுந்தாலும் ஒன்றுடன் இன்னொன்று ஒட்டிக்கொண்டுதானே இருக்கின்றன. அப்படியும் ஏன் பல முகங்கள் தெரிகின்றன, டிங்கு?

- வி. பிரகன்யா, 5-ம் வகுப்பு, பாரதி வித்யாலயா பள்ளி, பெரும்பாக்கம்.

ஒரு கண்ணாடி பல துண்டுகளாக உடைகிறது.இப்படி உடைந்த பகுதிகள் ஒவ்வொன்றும் சற்று மாறுபட்ட கோணத்தில் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதனால் ஒளி பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. அதாவது ஒரு முக்கோணப் பெட்டகத்துக்குள் (Prism) செலுத்தப்படும் ஒளி, பல வண்ணங்களாகச் சிதறடிக்கப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். அதே போன்றுதான் உடைந்த கண்ணாடியின் துண்டுகளும் பல திசைகளில் ஒளியைச் சிதறடிக்கின்றன. அதனால், ஒவ்வொரு துண்டிலும் முகம் தெரிகிறது பிரகன்யா.

யானைகள் ஏன் காதுகளை அசைத்துக்கொண்டே இருக்கின்றன, டிங்கு?

- ஆர். கிருத்திகா, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

யானைகள் எப்போதுமே காதுகளை வேகமாக அசைத்துக்கொண்டிருப்பதில்லை. வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது யானைகளின் உடல் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. அப்போது உடலின் வெப்பநிலையைச் சற்றுக் குறைப்பதற்காக யானைகள் தங்களின் பெரிய காதுகளை வேகமாக அசைக்கின்றன.

வெளிப்புற வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியாக இருக்கும் காலத்தில் யானைகள் காதுகளை வேகமாக அசைப்பதில்லை. இடைவெளிவிட்டு மிக மெதுவாகவே காதுகளை அசைக்கின்றன. உடலின் வெப்பநிலை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்கின்றன. சில நேரம் மண், பூச்சிகள் போன்றவற்றைத் தட்டிவிடுவதற்காகவும் காதுகளை அசைப்பது உண்டு, கிருத்திகா.

வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளை விமானத்தில் அழைத்துச் செல்ல முடியுமா, டிங்கு?

- பி. சபரிவாசன், 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

வெளிநாடுகளில் செல்லமாக வளர்க்கும் விலங்குகளை அழைத்துச் செல்வதற்கு விமானங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் வளர்ப்பு விலங்குகளை அனுமதிக்கின்றன. இண்டிகோ, ஏர் ஏசியா போன்ற நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

விலங்குகள் பிறந்து எட்டு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும். ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கக் கூடாது. விலங்குகள் கருவுற்று இருக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் விலங்குகளை வைக்க வேண்டும். பயணிகள் இருக்கைகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பது போன்ற விதிமுறைகளுடன் ஏர் இந்தியா விமானம் விலங்குகளை அனுமதிக்கிறது, சபரிவாசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x