

பிறக்கும் உயிர்கள் அனைத்தும் இறக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், மரணத்தைப் புரிந்துகொள்வதும் நம்மைச் சார்ந்தவர்கள் இறக்கும்போது வருந்துவதும் மனிதர்களுக்கே உரிய பண்பாகப் பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் விலங்குகள் மரணத்தைக் கண்டு வருந்துவதில்லையா?
காகம் ஒன்று இறந்தால் மற்ற காகங்கள் கரைந்தபடி சூழ்வதைப் பார்த்திருப்போம். தன் குட்டிகளோ உரிமையாளரோ இறந்தால் நாய்கள் ஊளையிட்டு அழுவதைக் கேட்டிருப்போம். இறப்பின்போது விலங்குகள் வருத்தம் அடைவதை விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
யானைக் கூட்டம் செல்லும் வழியில் இறந்த யானையின் எலும்புகளைக் காண்டால் மரியாதை செலுத்துவது வழக்கம். ஓங்கில் ஒன்று இறந்த குட்டியைச் சுமந்து வருவதைக் கண்ட மற்ற ஓங்கில்கள், அதைப் பாதுகாப்பாக இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றதை விஞ்ஞானிகள் பதிவுசெய்துள்ளனர். சிம்பன்சி இறந்த தன் குட்டியின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்ததும் நடந்துள்ளது.
விலங்கியல் ஆய்வாளரான பார்பரா ஜே கிங், விலங்குகள் தங்கள் இனத்தில் ஒன்று இறக்கும்போது அவற்றின் தினசரி நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதாகக் கூறுகிறார். சாப்பிடாமல், தூங்காமல், வேண்டுமென்றே ஆபத்துகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது போன்ற நடவடிக்கைளை விலங்குகள் மேற்கொள்கின்றன என்கிறார்.
பரிணாம வளர்ச்சியில் கீழ்நிலையில் உள்ள விலங்குகள்கூட இன்பத்தையும் துன்பத்தையும் உணரும் என 1871ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் குறிப்பிட்டார். அவர் கூறியதைப் போல விலங்குகளுக்கு உணர்வுகள் உண்டு என ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானிகள், அவை இறப்பின்போது வேதனைகொள்கின்றன என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
விலங்குகள் துக்கம் அனுசரிப்பதாகக் கருதுவது மனித பண்பினை விலங்குகளுக்குப் பொருத்தும் முயற்சி என்று வாதிடுகின்றனர். நாம் உயிருடன் இருக்கிறோம் என்கிற பிரக்ஞையைப் பெற்றவர்களால் மட்டுமே இறப்பு என்பதை உணர முடியும். விலங்குகளுக்குச் சுய பிரக்ஞை இல்லை என்பதால் அவற்றுக்குத் துக்கம் ஏற்படுவதில்லை என்கின்றனர்.
காட்டுயிரியலாளர் ஜோ முல்லர், கென்யாவில் பணியாற்றியபோது 17 பெண் ஒட்டகச்சிவிங்கிகள் அமைதியின்றித் தவிப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது ஓர் ஒட்டகச்சிவிங்கியின் காயம்பட்ட குட்டி இறந்துகிடந்தது. இதனால், அவை தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு ஆறுதல் சொல்ல முயன்றன என்பதைப் புரிந்துகொண்டார்.
இரண்டு நாள்கள் அந்த ஒட்டகச்சிவிங்கிகள் கூட்டம் தாயின் பக்கத்திலேயே இருந்து, இறந்த குட்டியின் உடலைத் தடவிக்கொடுத்துள்ளன. மூன்றாவது நாள் முல்லர் அந்த இடத்துக்குச் சென்றபோது, இறந்த குட்டியைக் கழுதைப்புலிகள் தின்றுகொண்டிருந்தன. இதைப் பார்த்த தாய் உணவு உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் இருந்திருக்கிறது.
இந்தக் காட்சியைக் கண்டதும் முல்லரின் நிலைப்பாடு மாறத் தொடங்கியது. மனிதன் அல்லாத விலங்குகளும் துக்கம்கொள்கின்றன. நாம் அனைவருமே பாலூட்டிகள். நமது உணர்ச்சிகள் ஹார்மோன்களினால் விளைவது. பரிணாமம் அடைந்த பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான ஹார்மோன் வளர்ச்சிதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதால் விலங்குகளும் வருந்துகின்றன என்கிற முடிவுக்கு வந்தார்.
சூழலியலாளர் ஆனி எங், போட்ஸ்வானாவில் பபூன் குரங்குகளை ஆராய்ந்தபோது, அவற்றில் சில்வியா என்கிற பெண் குரங்கு ஒன்றைக் கண்டார். அந்தக் குரங்கு மற்ற குரங்குகளை காயப்படுத்திவந்தது. சில்வியாவின் மகளைச் சிங்கக்கூட்டம் ஒன்று தாக்கியது. மகள் இறந்ததைக் கண்டு மனமுடைந்த சில்வியா, தனிமைக்குச் சென்றுவிட்டது.
அந்தக் குரங்கு மன உளைச்சலில் இருக்கலாம் என்று கணித்த ஆனி, அதனையும் உறவினர்களை இழந்த மற்ற பெண் குரங்குகளையும் ஆராய்ந்தார். இதில் உறவினர்களை இழந்த குரங்குகளின் உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் (glucocorticoids) அதிகமாகச் சுரப்பது தெரியவந்தது. மேலும், சில்வியா மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கியது. சில வாரங்களிலேயே சில்வியாவின் உடலில் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கியது.
இதே சோதனையை மனிதர் களிடமும் செய்ததில் துணையை இழந்த பெண்கள் தோழிகளின் ஆதரவை நாடியதும், அதற்குப் பிறகு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைந்ததும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் விலங்குகளுக்கும் மனிதர்களைப் போலத் தங்களுக்கு நெருக்க மானவர்களின் இறப்புக்குப் பின் துக்கம், வேதனை ஏற்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் கிடைத்தன. இப்போது இறப்புடன் மனிதர்கள், விலங்குகளுக்கு இருக்கும்உணர்வு ரீதியான உறவை ஆராய்வதற்கு ஒரு துறையே (evolutionary thanatology) இயங்கிவருகிறது.
சமூகமாக இயங்கும் உயிரினங்கள் மட்டுமே இறப்பை எண்ணி வருந்துகின்றன. விலங்குகளும் குடும்பம், நண்பர்கள் என உறவுகளையும் அவர்களுடனான அனுபவங்களையும் சேகரிக் கின்றன. அவர்களில் யாராவது இறந்துவிட்டால் ஏதோ ஒன்று குறைவதாக உணரும் விலங்குகள், அவற்றை நினைவுகளுடன் பொருத்திப் பார்த்து, இழப்பை உணர்ந்து வாடுகின்றன.
- tnmaran25@gmail.com
(விடைகளைத் தேடுவோம்)