

கால்பந்து உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் இருபத்தி இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டனின் கிளாஸ்கோவில் தொடங்க உள்ளன. 2022 தொடரில் பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தை இந்தியா பிடித்திருந்தது.
இந்த முறை 13 விளையாட்டுப் பிரிவுகளில் 78 ஆண்கள், 48 மகளிர் என 126 பேர் கொண்ட குழுவை இந்தியா அனுப்புகிறது. அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இந்திய அணி காட்சியளிக்கிறது. இதில் சில வீரர்கள் இந்த முறை பதக்கப் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்களில் சிலர்:
குல்வீர் சிங்
நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் நட்சத்திர வீரராக உருவெடுத் திருக்கிறார் குல்வீர் சிங். காமன்வெல்த் போட்டியில்
5,000 மீ., 10,000 மீ. என இரண்டு பிரிவுகளிலும் போட்டியிட உள்ளார். இந்த சீசனில் 5,000 மீட்டர் இலக்கை 13:03.93 விநாடிகளில் சிறப்பாகக் கடந்திருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் 5,000 மீட்டரில் சாதித்த இரண்டு கென்யர்கள், ஆஸ்திரேலியாவின் ராபின்சன்; 10 ஆயிரம் மீட்டரில் கென்யாவின் ஒலிம்பிக் பதக்க வீரர் எட்வின் குர்காட் ஆகியோர் இவருக்குச் சவாலாக இருப்பார்கள்.
குல்வீரும் முதல் ஐந்து பதக்கப் போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். 28 வயதான இவர், பதக்க மேடையை அலங்கரிக்க உச்சக்கட்ட திறமையை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.