

சிந்தனை சங்கிலி அல்லது சங்கிலித் தொடர் சிந்தனை எனும் உத்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான பிராம்ட் பொறியியலில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
இப்போது நாம் பார்க்க இருக்கும் ஏஐ சேவைகளின் முக்கியப் பிரச்சினைக்கும் இதற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ‘ஹலுசினேஷன்’ எனச் சொல்லப்படும் ஏஐ உளறல்தான் அந்தப் பிரச்சினை. ஏஐ எப்படி உளறும் என்று கேட்பது தவறு. ஏஐ சேவைகள் ஏன் உளறுகின்றன என்றுதான் நாம் கேட்டாக வேண்டும்.
ஏஐ சாட்பாட்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் திறனைக் கொண்டிருப்பது பற்றிதான் பரவலாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஏஐ சாட்பாட்கள் தவறான பதில்களை அளிக்கும் தன்மை கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
இதைத்தான் ‘ஏஐ ஹலுசினேஷன்’ என்கின்றனர். இல்லாத தகவல்களை இருப்பதுபோல சாட்பாட்கள் அளிக்கும் தன்மையே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. இதைப் பிதற்றல் அல்லது உளறல் என்று புரிந்துகொள்ளலாம். ஏஐ மயக்கம் என்றும் சொல்லலாம்.
பிழை பதில்கள்
நம்பக்கூடியது போலத் தோன்றும். ஆனால், தவறான அல்லது இல்லாத தகவல்களை சாட்பாட்கள் அளிப்பது என இதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சித் தரவுகளில் இல்லாத தகவல்களைக் கொண்டு அளிக்கப்படும் பதிலாகவும் இது அமையலாம். இந்தப் பதில்கள் அபத்தமாகவும் முழுவதும் தவறாகவும் இருக்கலாம் என்பதுதான் பிரச்சினை.
கேட்கப்படும் கேள்விகளுக்குப் பொருந்தாத, உண்மைக்கு மாறான பதில்களை சாட்பாட்கள் வழங்குவது தொடர்பாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் பதிவாகி இருக்கின்றன.