

“பெரியவங்க சொன்னா சரின்னு சொல்லிப் பழகு" என்று என் பாட்டி காலங்காலமாகச் சொல்வதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. சொல்வதைக் கேட்டுக் கற்றுக்கொள்வதைவிட, குழந்தைகள் பார்த்துக் கற்றுக்கொள்வதே அதிகம். என் வீட்டில் சிறுவயதில் பார்த்தவை அனைத்துமே இன்று நான் நானாக இருப்பதற்குக் காரணம். புத்தகங்களைப் படிப்பதற்குமுன் என் வீட்டில் உள்ளவர்களைப் படித்து வளர்ந்திருக்கிறேன்.
என் பாட்டி ஒருபொழுதும் யார் சொன்னதையும் கேட்டு, சரியென்று தலையாட்டி, நான் பார்த்ததே இல்லை. சிறு வயதிலேயே கணவரை இழந்த என் பாட்டிக்கு வாழ்க்கையில் கிடைக்காதது எவ்வளவோ இருந்தாலும், அவருக்குக் கிடைத்தது பல பெண்களுக்கு இன்னும் போராட்டமாக இருக்கும் ஒன்று, சுதந்திரம்.
கசாப்புக் கடையில் கோழியின் இறக்கையைப் பிய்ப்பதைப் போல், பெண்களின் சுதந்திரமும் காலத்துக்கேற்ப கத்தரிக்கப்பட்டாலும், தனக்குத் தோன்றுவதைப் பேசுவதிலும் தனக்கான முடிவுகளைத் தானே எடுப்பதிலும், தனக்கென்ற தனித்துவமான சிந்தனையைக் கூர்மைப்படுத்திக்கொள்வதிலும் என் பாட்டியின் தனித்துவத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.
இன்றுவரை ஒவ்வொரு நாள் இரவும் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு, கால்களை நீட்டிக்கொண்டு அன்றைய செய்தித்தாளைப் பரப்பி வைத்துக்கொண்டு, பழைய கண்ணாடி மூலம் செய்திகளை வாசித்துக்கொண்டிருக்கையில் அவருடைய மூளைக்குள் உலகத் தலைவர்களின் நூற்றுக் கணக்கான சிந்தனைகள் ஊடுருவிக் கொண்டிருக்கும். எதைப் பற்றிப் பேசினாலும், எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததே இல்லை. இன்று இந்த உலகத்திடம் முன்வைக்கும் மாற்றுக்கருத்துகளுக்கு விதை - என் பாட்டி போட்டதுதான்!
தந்தையின் கோபம்: குழந்தைகளை அடிக்கக் கூடாது. அவர்களின் சுயமதிப்பைக் குறைக்கும் வகையிலான சொற்களால் அவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் என் தோழி கூறுகையில், அவர்களது குடும்பம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பதுண்டு.