

ஒரு கஃபே. கல்லூரியில் படிப்பவர்களும் இளைய வயதினரும் பர்கர், பீட்சா, கோக்கில் மூழ்கி அரட்டையில் லயித்து இருக்கிறார்கள். இதுபோன்ற கூட்டங்களில் திடீரென ஒருத்தனோ, ஒருத்தியோ முளைப்பார்கள். அங்கிருந்த யாரோ ஒருவருக்கு மட்டுமே அவரைத் தெரிந்திருக்கும். சில நேரம் யாருக்கும் தெரியாத, முற்றிலும் அந்நியராகக்கூட அந்த நபர் இருக்கலாம்.
“ஹாய்.. ப்ரோ..!” சில நிமிடங்களில், சில சம்பிரதாய உரையாடலுக்குப் பிறகு திறன்பேசி எண் பரிமாறப்படும். அடுத்த கேள்வி “இன்ஸ்டா ஐடி என்ன?”. இதனால் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? ஒரு மழை நாளில் அந்தக் குட்டிநாய் வீட்டு வாசலில் நின்றது.
எடுத்து வளர்க்கத் தோன்றியது. கொஞ்சநாளில் அது, அதன் வசதிக்கு என்னை வளர்த்து, அதன் உலகில் என்னைத் திணிக்க முயன்றது. நாயின் மொழியை நான் கற்க வேண்டியிருந்தது.
சரி, இதில்தான் என்ன பிரச்சினை? ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே கஃபேயில் ஒரு பெண் இப்படிச் சொல்வதாக நினைத்துப்பாருங்கள். “இதே ஷாப்லதான் அவன் எனக்குத் தற்செயலா அறிமுகமானான். போன் நம்பர் வாங்கிக்கிட்டோம்.
ஒரு அவசியமும் இல்லாம அன்னிக்குத் தற்செயலா ஆரம்பிச்ச ஒரு ‘ஹாய்’ மெசெஜ்தான் என்னை இன்னிக்கு இந்த லெவல்ல கொண்டு நிறுத்தியிருக்கு.” இப்படித் தற்செயலான உறவுகள், நமது வாழ்விலும் வந்திருக்கலாம். அதன்மூலம் அந்த உறவுகளின் அறிமுகத்தால் வாழ்க்கை நம்மை எங்கோ கூட்டிச் சென்றிருக்கலாம்.
ஒருகட்டத்தில் அந்த உறவையோ, அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பையோ விடமுடியாமல் நாம் தவிக்கும்போது நிச்சயம் தோன்றும். “எனக்கு மட்டும் ஏன்?” அந்த நாள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்? அன்று நான் அவனை /அவளைச் சந்திக்காமல் இருந்திருந்தால்? இதனால் அறியப்படும் நீதி, யாராவது திறன்பேசி எண் கேட்டால் கொடுக்கக் கூடாது என்பதல்ல. உறவுகளே கூடாது என்பதும் அல்ல.