

சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று விருப்பத்துக்குரிய ஒன்றாகிவிட்டது. இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக்கில் ரீல்ஸ், யூடியூபில் ஷார்ட்ஸ் என்று இவற்றுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.
விதவிதமாக ரீல்ஸ் எடுக்கிறேன் என்கிற பெயரில் உயிரைப் பணயம் வைப்பது தொடங்கி, இன்று அடுத்தவர் உயிரையே பணயம் வைக்கும் அளவுக்கு ஒழுக்கக்கேடாகவும் இந்த ரீல்ஸ் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ இந்த ரீல்ஸ் மோகம்?
டிக்டாக் மாற்று: திறன்பேசிகளின் வரவுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதுவும் காணொளி சார்ந்த சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே, பார்வையாளர்களின் எண்ணிக்கையும் எக்குத்தப்பாக அதிகரித்தது. இதற்கெல்லாம் பாதை அமைத்துக் கொடுத்தது டிக்டாக் செயலிதான்.
காணொளி செயலிகளில் இந்தச் செயலி முதன்மையாக இருந்தது. இந்தச் செயலியைத் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகவே பலரும் கருதினர். குறிப்பாக இளைய தலைமுறையினர் பலரும் டிக்டாக் செயலியின் வாயிலாகத் தங்கள் திறமையை வெளிக்காட்டத் தொடங்கினர்.