

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்கள் அல்லது ஏஐ ஏஜெண்ட்களிடம் எதிர்பார்த்த பலனைப் பெறுவதற்கான வழியாகச் சொல்லப்படும் பிராம்ப்ட் பொறியியலில் உள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் பார்த்தோமல்லவா? பிராம்ப்ட் வழிகாட்டுதல்களில் இன்னொரு முக்கியப் பிரச்சினையும் இருக்கிறது.
ஏஐ ஆய்வில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் காரணமாக ஏஐ சேவைகளும் மேம்பட்டுக்கொண்டே இருக்கின்றன அல்லவா? அதில்தான் எதிர்பாராத பிரச்சினையும் இருக்கிறது. மேம்பாட்டுக்காக ஏஐ மாதிரிகளுக்குப் புதிதாகப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவற்றுக்கான காரணிகள் மாற்றி மெருகேற்றப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான பிராம்ப்ட் ரகசியங்கள் பழைய மாதிரிகளின் செயல்பாட்டுக்காகக் கண்டறியப்பட்டவை.
நவீன கிளிப்பிள்ளைகள்
புதிய மேம்பட்ட ஏஐ மாதிரிகளிடம் பழைய பிராம்ப்ட் மந்திரங்கள் எடுபடாமல் போகலாம்தானே. ஆகாஷ் குப்தா என்கிற ஆய்வாளர், பிராம்ப்ட் பொறியியல் தொடர்பான 1,500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அலசிப் பார்த்து, பல பிராம்ப்ட் வழிமுறைகள், புதிய மாதிரிகளில் பலன் அளிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானமாக முன்வைக்கப்படும் வழிகளும் சரி, லின்க்டுஇன் போன்ற சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிர்ந்துகொள்ளப்படும் வழிகளும் சரி, மாறிக்கொண்டே இருக்கும் ஏஐ மாதிரிகளில் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம் என்கிறார். அதுமட்டுமல்ல, மொழி மாதிரிகளை மேலும் துல்லியமான செயல்பாட்டுக்காக மேம்படுத்தும்போது, முந்தைய மாதிரிகள் சிறப்பாகச் செயல்பட்ட சாதாரண விஷயங்களில் இவை கோட்டை விடலாம் என்றும் கருதப்படுகிறது.