

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்வாகனப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில், வித்தியாசமாக ஒற்றைச் சக்கர மின்வாகனம் இளம் தலைமுறையினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துவருகிறது.
இந்த வாகனத்தைக் கொண்டு, ‘இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போகுதும் அடடா...’ என்கிற பாடல் வரிகளோடு ஒரு நெடும் பயணத்தை மேற்கொண்ட இளைஞர் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளார்.
‘இந்தியன் 2’ படத்தின் கிளைமாக்ஸில் இந்தியன் தாத்தா ஒற்றைச் சக்கர வானத்தில் சாகசம் செய்வார். அப்படியான தோற்றத்தில் இருக்கும் இந்த ஒற்றைச் சக்கரத்துடனான மின்வாகனத்தின் பெயர் ‘யூனிசைக்கிள்’.
இந்த சைக்கிளில் நெடும் பயணம் மேற்கொள்வது, காணொளிகளை ஒளிப்பதிவு செய்து இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார், சேலத்தைச் சேர்ந்த கிரண் முரளி.