

“ஏம்மா! ஃப்ரீயா இருந்தா அஞ்சு நிமிஷம் சொறிஞ்சிவிட்டுட்டுப் போயேம்மா, அரிப்பு தாங்கல” என்று ‘ஷாஜகான்’ படத்தில் காமெடியாக விவேக் கூறியிருப்பார். உண்மையிலேயே நடுமுதுகில் அரிப்பு ஏற்பட்டால் எந்தப் பொருளையாவது எடுத்துச் சொறிய முற்படுவோம்.
முடியாவிட்டால், வீட்டில் உள்ளவர்களின் உதவியை நாடுவோம். அவர்களும் அரிக்கும் இடத்தை விட்டுவிட்டு அரிக்காத இடத்தில் சொறிந்து இம்சைப்படுத்துவார்கள். அதெல்லாம் சரி, இப்போது ஏன் இந்தச் சொறியும் கதை? ஓர் இளைஞர் சொறிந்துவிடுவதையே தொழிலாகச் செய்துவருகிறார்.
இதில் மாதந்தோறும் லட்சக்கணக்கிலும் சம்பாதிக்கிறார் என்றால் நம்புவீர்களா? உடனே, இந்தச் சொறியும் வேலையை நாமும் செய்தால் என்னவென்று யோசிக்க வேண்டாம். அது நம்மூரில் இல்லை. அண்டை நாடான சீனாவில்தான் இது சாத்தியமாகி இருக்கிறது.
ஷார்ட்ஸ் காட்டிய வழி
சீனாவின் ஹூபே (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் ஸாங் ஸியாவ்கியாவ் (Zhang Xiaoqiao). 32 வயதான இவர்தான், அந்தப் புண்ணியக் காரியத்தைச் செய்துவருகிறார்.
படிப்பை முடித்த பிறகு பல்வேறு தொழில்களைச் செய்தும், எதுவும் அவருக்குச் சரியாக அமையவில்லை. விரக்தியின் விளிம்பில் இருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல், தலையைச் சொறிந்துகொண்டே(!) திறன்பேசியில் மூழ்கியிருக்கிறார்.