

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலோடு சேர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் பற்றிய பேச்சும் சூடுபிடித்துவிடும். தற்போது 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற சுவாரசியமான சில விஷயங்கள்:
தமிழ் எங்கே?
ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டை ஒட்டிச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியானது. அதில் தோனி உள்பட சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள், தமிழில் எழுதப்பட்டிருந்த தங்களது பெயர்களைச் சரியாக அடையாளம் காண வேண்டும் என்று ஒரு சவால்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தக் காணொளியில் ‘சென்னை அணியில் ஒரு தமிழக வீரர்கூட இல்லையே’ எனச் சிலர் சுட்டிக்காட்டி கிண்டலடிக்க, தமிழ்ப் புத்தாண்டில் சிஎஸ்கே தாக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் என நான்கு தமிழக வீரர்களை அணியில் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தது. லைக்ஸ் அள்ளிய இப்பதிவால் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஒருவர்கூட இல்லாதது பற்றிய விவாதம் இன்ஸ்டகிராமில் சூடுபிடித்தது.
இட்லி தோசை பிரச்சினை
சிஎஸ்கே - ஆர்சிபி, சிஎஸ்கே - எம்ஐ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளின்போது ரசிகர்கள் மோதல் இருப்பது வழக்கம். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதின. இந்தப் போட்டியின்போது ஆர்.சி.பி. ஆதரவு டி.ஜே. ஒருவர், சென்னை வீரர்களைக் கிண்டல் செய்யும் வகையில் ‘தோச இட்லி சாம்பார் சட்னி’ என்கிற பாடலை அவ்வப்போது ‘பிளே’ செய்ததாகக் கூறப்படுகிறது.
இது சி.எஸ்.கே அணியின் தமிழ் அடையாளத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டிய சிஎஸ்கே அணி நிர்வாகம், பி.சி.சி.ஐயிடம் புகாரைத் தட்டிவிட்டது.
போட்டி நடைபெறும் மைதானத்தை ‘ஹோம் கிரவுண்’டாகக் கொண்ட அணி ஆதரவாக டி.ஜே.க்கள் பாடல்களை ‘பிளே’ செய்வது அண்மைக் காலமாக வழக்கமாகிவிட்டது. என்றாலும் எதிரணியைக் கிண்டல் செய்யும் வகையில் அல்லது மனதைப் புண்படுத்தும் வகையிலான பாடல்களைத் தவிர்க்க வேண்டுமென டி.ஜே.க்களுக்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது!
பிளாக் மேஜிக்
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியைச் சுற்றும் சர்ச்சைகளில் மற்றுமொரு விஷயம்தான், ‘பிளாக் மேஜிக்’. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் விளையாடியது.
இப்போட்டியின்போது ஹைதராபாத் அணி ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சை பழத்தோடு மந்திரம் சொல்வது போலவும், அவர் மந்திரம் சொன்னதற்குப் பிறகு சிஎஸ்கே அணி வீரர் ஒருவர் ஆட்டமிழப்பது போலவும் காணொளி ஒன்று வெளியானது.
சட்டென வைரலான இந்தக் காணொளியைத் தொடர்ந்து ‘பிளாக் மேஜிக்’ நிகழ்வைக் கண்டிக்குமாறு பிசிசிஐக்கு சி.எஸ்.கே. அணி நிர்வாகம் கடிதம் எழுதியதாக வதந்தி பரவியது.
எது உண்மை, எது பொய் எனத் தெரிய வருவதற்குள் ‘பிளாக் மேஜிக்’ சம்பவம் பெரிய ஐபிஎல் வதந்தியாகிவிட்டது. ஹைதரபாத் ரசிகர் விளையாட்டாக மந்திரம் செய்வது போல பாவணை செய்தது உண்மை என்பதும் ஆனால் ‘பிளாக் மேஜிக்’ செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் அப்படிச் செய்யும்போது யதேச்சையாக விக்கெட்டும் சரிந்ததால், அந்தக் காணொளி வைரலாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) காணொளிகள் கொட்டிக்கிடக்கும் இந்தக் காலத்தில் கண்ணால் பார்க்கும் எதையும் ஒன்றுக்குப் பல முறை சரிபார்த்த பிறகு பகிர்ந்துகொள்வதே நல்லது என்பது, நெட்டிசன்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய விஷயம்!