

“டேய்.. ” என்கிற குரலைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான் பதின்பருவத்தில் இருந்த எட்சன். ஆம், சற்றுக் கோபமாக அழைத்தவர் அவனுடைய அப்பா டான்டின்ஹோ. நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்த எட்சன், சிகரெட் துண்டை வீசி எறிந்துவிட்டுப் பதற்றமானான்.
சற்றுக் கோபமாகப் பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல் நகர்ந்துவிட்ட அப்பாவை நினைத்து மனசுக்குள் அவனுக்குப் பயம். பதற்றமாக இருந்தாலும் முகத்தில் ஏதும் தெரியாததுபோல வீட்டுக்குள் நுழைந்தான் எட்சன். “எவ்வளவு நாளா இப்படி தம் அடிக்குற எட்சன்” என்று மெல்லியக் குரலில் கேட்டார், அவனுடைய அப்பா.
“அது வந்துப்பா..” என்று வார்த்தையை விழுங்கினான். “ம்... சிகரெட்ல என்னதான் இருக்கு? இந்த சின்ன வயசிலேயே கெட்ட பழக்கம் எப்படிடா வந்துச்சு?” - இப்படிக் கேட்டதும் எட்சன் அமைதியாகிவிட்டான்.
“உனக்கு ஃபுட்பால்னா உசிரில்லையா? ஃபுட்பால் வாங்கணும்னு ஆசை, இல்லையா எட்சன்?” என்று மகனை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டார் அப்பா. ஏனெனில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தன்னுடைய மகன் எட்சன் என்றைக்காவது ஒரு நாள் பிரேசில் கால்பந்து தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அப்பாவின் கனவு.
புகைபிடிப்பதைப் பற்றிக் கேட்டுவிட்டு, திடீரென்று கால்பந்தை வாங்குவது பற்றி அப்பா பேசுகிறாரே என்று எட்சனுக்கோ குழப்பம். அப்பாவின் பேச்சில் உள்ளர்த்தம் இருந்தது.
எட்சனுக்கும் கால்பந்து விளையாட்டுதான் எல்லாமே. அப்பாவின் கனவை நிறைவேற்றுவது அவனுடைய லட்சியமும்கூட. ஆனால், ஒரு கால்பந்து வாங்கக்கூடப் பணமில்லை, வழியில்லை. அவ்வளவு வறுமை.