

இந்த வசனங்களை அன்றாடம் கவனித்திருப்போம்; நாமும் பேசியிருப்போம்.
காட்சி-1
“எனக்கு இட்லி, வடை.. உனக்கு என்ன வேணும்?”
“எனக்குப் பொங்கல்.”
“அப்போ எனக்கும் அதையே கொடுத்துடுங்க.”
காட்சி-2
“மாப்ள... நெட்ஃபிளிக்ஸ் போடு. இல்ல,
இன்னிக்கு அமேசான் பிரைம்ல ஒரு சீரிஸ் பாப்போம்,
வேண்டாம், ஐபிஎல் கிரிக்கெட் பாப்போம்.”
இப்போது ஒருவர் பொங்கல் சாப்பிடுகிறார். இன்னொருவர் சாய்ஸ் இல்லாமல் கிரிக்கெட் பார்க்கிறார். நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள், இவர்கள்தான் என்றாவது “எனக்கு மட்டும் ஏன்?” என்று புலம்பப்போகிறவர்கள். நிச்சயம் அந்த உதடுகளில் காத்திருக்கின்றன “எ.ம.ஏ..?” வார்த்தைகள்.
வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இப்படியா, அப்படியா என்கிற இக்கட்டான கட்டத்தில் ஏதோ ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். இவர்கள் வெற்றியும் பெற்றிருக்கலாம். ஒருவேளை எடுத்த முடிவினால், தோல்வி அடைந்தாலும்கூட, அவர்கள் முடிவு எடுத்ததே வெற்றிதான் என்றுகூடப் பெருமைபட்டுக் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் இவர்கள் வெற்றியாளர்களே.
இன்னொரு பிரிவினர் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்கிற முடிவை மட்டும் எடுத்தவர்கள். இவர்களும் அப்படி உறுதியாக நின்ற விதத்தில் வெற்றியாளர்களே!
அப்படியானால், தோல்வியாளர்கள் யார்? மேலே பொங்கல், இட்லி; நெட்ஃபிளிக்ஸ், கிரிக்கெட் என்று முடிவை மாற்றி மாற்றி எடுத்தவர்கள்தான்!