

‘ஒரு முறை பரிமாறப்பட்ட இலையில் மீண்டும் அதே பிரியாணியைப் பரிமாற முடியாது’ என்னும் புதுமொழி ஒன்று கடந்த வாரம்தான் இந்த உலகில் உருவாக்கப்பட்டது. விவரம், கீழே: ஒரு விருந்து. என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணியைப் பதற்றத்துடன் மறுத்ததைப் பார்த்து, அவர் உயர்தர சைவம் என்று எண்ணினேன்.
எனது இலை பிரியாணியைப் பார்த்து அவர் சொன்னார், “இல்ல, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, அதுதான்” “அப்படீன்னா?” “மத்த நாள்கள்ல என்னால மட்டன், சிக்கன் பிரியாணியைப் பிரிஞ்சு இருக்க முடியாது.”
பொதுவாகப் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களிலும் மதரீதியான கட்டுப்பாடு உள்ள நாள்களிலும் பலரும் அசைவத்தைத் தவிர்ப்பதை அறிந்திருக்கிறேன்.
ஆனால், இப்படிச் சம்பந்தமே இல்லாமல், அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்பது ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் அவற்றின் உடலின் நிலையாமையை உணர்த்தும் நாளாகக் கருதப்படும் நாளில் இது எப்படி? விசாரித்தபோது,“ஞாயிற்றுக்கிழமைல சில விபத்துகள், பிரச்சினைகள் எனக்கு ஏற்பட்டுச்சு.
கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, அன்னிக்கு எல்லாம் நான் அசைவம் சாப்பிட்டிருக்கேன். அதனால, அசைவம் சாப்பிடறத விட்டுட்டேன்” என்று தனது உணவுக்கொள்கையை அவர் விளக்கினார். ஓர் அசைவ பிரியாணிக்குப் பிரச்சினைகளை வெல்லும் திறன் இருப்பதாக, அதுவரை நான் அறிந்ததில்லை.
“அப்படீன்னா மத்த நாள்கள்ல பிரச்சினைகள் எதுவும் நடக்குறது இல்லையா? சாப்பிடாம இருந்தா மட்டும் ஞாயிற்றுக்கிழமைல உங்களுக்குப் பிரச்சினைகள் ஏதும் வர்றதே இல்லையா?” “எல்லா நாளும் ஏதோ ஒண்ணு நடக்கத்தான் செய்யுது. ஆனா, சன்டே சாப்பிட்டா ஏதோ ஒண்ணு நடக்கும்னு பயம் மட்டும் போகவே மாட்டேங்குது. இது முட்டாள்தனம்னு புரியத்தான் செய்யுது.
சாப்பிட ஆசையாத்தான் இருக்கு. ஆனா பயம். எனக்கு மட்டும் ஏன் சார் இப்படீலாம் நடக்குது?” இப்போதுதான் மேலே சொன்ன புதுமொழி உயிர்த்தது. இதுபோல் பலரும் இருக்கிறார்கள். நிறைய பயங்களும் இருக்கின்றன.