

பொன் முட்டையிடும் வாத்து ஒன்று ரகசியமாக உங்களுக்குக் கிடைக்கிறது. இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என்று நீங்களே நினைத்துக்கொள்கிறீர்கள். ஆனால், கவலைப்படாமல் இருக்க முடியுமா? கனவிலும் நனவிலும் பார்க்கிற ஒவ்வொரு மனிதரையும் நினைத்து அச்சம்கொள்வீர்கள்.
அந்தக் குழந்தை, இந்த மூதாட்டி, இவருக்குத் தெரியுமோ, அவருக்குத் தெரிந்திருக்குமோ, இந்தப் பெரியவருக்கு ஒரு வணக்கம் போட்டு வைப்போம். தேவையின்றி இவரை எதற்குப் பகையாளி ஆக்கிக்கொள்ள வேண்டும்? இப்படிக் கவலைகள் செல்லும்.
அடுத்து, அந்தப் பொன்முட்டைகளை வைத்துக்கொண்டு யாராலும் சும்மா இருக்க முடியாது. அதன் பலன்களை அனுபவிக்கவே விரும்புவோம். அது புதிய இன்பங்களையும் வாழ்க்கை முறைகளையும் அறிமுகப்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, அணியும் ஆடை, திறன்பேசியிலிருந்து பயணிக்கும் வாகனம்வரை, உணவிலிருந்து பேசும் பேச்சின் அலட்சியம்வரை மாறும். ‘என்ன வேணும் சொல்லு.
பாத்துக்கலாம்’, ‘கேவலம் ரூ. 25 லட்சம் ரூபாய்க்காகச் சண்டை போடலாமா?’, ‘என்னது, நீங்க குத்தாலம் போறீங்களா, நாங்க சம்மர்னா நியூசிலாந்து போயிருவோம்!’ என்று.
கடந்துசெல்பவர்கள் ஒன்றும் முட்டாள் அல்லவே. இவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறதே என்று நோட்டமிடத்தான் செய்வார்கள். அதில் ஒருவன் தீவிரமாகக் கண்காணிக்கிறான் என்று வையுங்கள். அவனைச் சமாளிப்பதே உங்கள் வேலையாகிவிடும்.
இப்போது விஷயம் வெளியே தெரியாமல் இருக்க, அந்தப் பொன்முட்டை ஆம்லெட்டின் சிறு துண்டைக் கொடுத்து, அவன் வாயை அடைத்தே தீர வேண்டும். இது பரிசு கொடுக்கும் படலம். ரகசிய நிலை, தவறைப் பரவலாக்கும் நிலைகளிலிருந்து, இப்போது நியாயப்படுத்தும் நிலை தொடங்கும்.
ஏனெனில், இப்போது அவர்களுக்காகவும் பொன்முட்டை இடும் வாத்தைக் கஷ்டப்படுத்தி முட்டையிட வைக்க வேண்டும். தவறுகள் அதிகமாக அதிகமாக தவறுகள் செய்வதே மரத்துப் போய், ‘இதெல்லாம் யார் செய்யாம இருக்காங்க? இதெல்லாம் உலக வழக்கம்தானே?’ என்று தோன்றும்.
அடுத்த பரிணாமம், அடிமை நிலை. யாரும் இலவச இன்பங்களை விட விரும்புவதில்லை. பரிசுகள் வாங்கி சுகம் கண்ட ஒருவன், நமக்கே இவ்வளவு தருகிறானே, அப்படியானால் இவனுக்கு எவ்வளவு கிடைக்கும் என்கிற ரீதியில் யோசிப்பான்.