

மனசாட்சி உள்ள மனிதர்களை மதிக்கிறோம். மனசாட்சி உள்ள மனிதர்களாக இருக்கவும் ஆசைப்படுகிறோம். மனசாட்சிதான் கடவுள் என்கிறோம்; கடவுளுக்குக் கொடுக்கும் மதிப்பையும் மனசாட்சிக்குக் கொடுக்கிறோம்.
‘உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு’ என்று மனசாட்சியைத் துணைக்கு அழைக்கிறோம். என்றாலும், மனசாட்சிப்படி வாழும் மனிதர்கள் சிலர், ‘எனக்கு மட்டும் ஏன்?’ என்று கண்ணீர்விட்டுக் கதறுவதைப் பார்க்கிறோம். தெளிவாகச் சொன்னால் அவர்கள்தான் அதிகம் கதறுகிறார்கள். ஏன், பாஸ்? ‘மனசாட்சி’ இரண்டு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சமூக வாழ்க்கையில் மனசாட்சி:
‘என் மனசாட்சிப்படி சரியாத்தான் செய்தேன்’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், 99% சொல்லிவிடலாம், நிச்சயம் அவர் ஏதோ தவறாகத்தான் செய்திருக்கிறார் என்று. இந்த இடத்தில் மனசாட்சி சமூகத்துக்குப் புறம்பான செயல்களை நியாயப்படுத்தத்தான் பயன்படுத்தப்படுகிறது அது சட்டப்படி தவறில்லாமல்கூட இருக்கலாம்.
ஆனால், அந்தச் செயல் பெரும்பாலும் ‘இந்தச் சேவைக்கு, வேலைக்கு, பொருளுக்கு அவர் இந்த அளவு வாங்கறார் அல்லது மார்க்கெட்டில் இந்த அளவு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நான் இவ்வளவு குறைவாக வாங்குகிறேன். ஏனென்றால், நான் மனசாட்சி உள்ளவன்’ என்கிற கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பொருளின் உற்பத்தி விலை 20 ரூபாய். லாபம் எல்லாம் சேர்த்து 100 ரூபாய்க்குச் சந்தையில் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, ‘இவ்வளவு அநியாய விலைக்கு விற்கிறார்களே’ என்கிற மனசாட்சிக் குரல் ஒருவரிடம் எழும். அவர் பொங்குவதைப் பார்த்து அவர் சேவை நோக்கில் நியாயமாக 40 அல்லது 50 ரூபாய்க்கு விற்கப்போகிறார் என்று நம்பி ஏமாந்துவிடக் கூடாது.
நிச்சயம் 95 முதல் 97 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்வார். 3 ரூபாய் குறைத்துவிட்டாராம். ஏனென்றால் மனசாட்சி உள்ளவராம்! ‘இதே செயலை / தவறை எல்லாரும் பெரிய அளவில் செய்கிறார்கள். நான் சிறிய அளவில்தானே செய்கிறேன்.’ இதுபோன்ற சூழல்களில்தான் மனசாட்சியைத் துணைக்கு அழைக்கிறோம்.