

விஜய் அமிர்தராஜ், பிரகாஷ் அமிர்தராஜ், மகேஷ் பூபதி, ராம்குமார் ராமநாதன் வரிசையில் தமிழ்நாட்டிலிருந்து மற்றுமொரு டென்னிஸ் நட்சத்திரமாக உருவெடுத் துள்ளார், திண்டுக்கல்லின் தக் ஷினேஸ்வர் சுரேஷ். டென்னிஸின் உலகக் கோப்பை என்றழைக்கப்படும் ‘டேவிஸ் கோப்பை’ டென்னிஸ் தகுதிச் சுற்றில் இந்திய அணி 2011-க்குப் பிறகு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முழுக் காரணமாக மாறியுள்ளார்.
ஆச்சரியப்படுத்திய ஆட்டம்: ஆண்கள் மட்டும் பங்கேற்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முதலில் தகுதிச் சுற்றுப் போட்டிகளும், பின்னர் இறுதிப்போட்டியும் நடைபெறும். வழக்கமாக ஒற்றையர், இரட்டையர் பிரிவில் வீரர்கள் தனியாக விளையாடி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது போல அல்லாமல், நாடுகளுக்கு இடையிலான போட்டியாக இது நடைபெறும்.
அப்படி 2026 டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த நெதர்லாந்து அணியை, 33ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி எதிர்கொண்டது. நெதர்லாந்துக்கு எதிரான ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி, பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தக் ஷினேஸ்வர் வென்றார்.
இந்த 6 உயரஅடி 6 அங்குலம் வீரர், இரட்டையர் பிரிவில் யூகி பாம்ரியோடு இணைந்தும் வெற்றியை உறுதிசெய்தார். இந்தியா - நெதர்லாந்து அணிகள் மொத்தம் ஐந்து போட்டிகளில் மோதின. இதில் தக் ஷினேஸ்வர், தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-2 என்கிற கணக்கில் இந்தியாவுக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.