நடுவுல கொஞ்சம் சஞ்சுவைக் காணோம்!
இருபது ஓவர் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்கிற பெருமைகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்கிறது. இந்திய அணி கோப்பையை வென்றாலும்கூட, அணியில் நிலவும் சார்புத்தன்மை, போதாமைகள் போன்றவையும் இந்த முறை வெளிப்படவே செய்தன.
எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைக் களையும்பட்சத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக சாம்பியனாகப் பீடு நடை போட முடியும். ஒரு காலத்தில் சில வீரர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இந்திய அணி இருந்தது உண்டு. ஆனால், ஐபிஎல்லுக்குப் பிறகு திறமையான வீரர்களுக்குப் பஞ்சமில்லை என்றாகிவிட்டது.
இதனாலேயே, தேசிய அணியில் இடம்பிடிக்கத் திறமையான வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். இதனாலேயே அணியில் இடம்பெறும் வீரர்கள், சில போட்டிகளில் சொதப்பினாலே, அவர் இடத்துக்குப் பங்கம் வந்துவிடுகிறது.
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சுற்றுப் போட்டிகள், சூப்பர் 8, நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 9 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. ஆனால், உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றி, தொடர் நாயகன் விருது பெற்ற சஞ்சு சாம்சன் விளையாடியது ஐந்து போட்டிகளில் மட்டுமே.
