

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோலைராஜின் கதை ஒரு உற்சாக டானிக். நாட்டின் எல்லையில் சேவையாற்ற ராணுவ வீரராக இணைந்த சோலைராஜ், உடல்நலக் குறைவால் காலை இழக்க நேரிட்டது. ஆனால், அதன்பின் பாரா போட்டிகளில் பங்கேற்று, நாட்டுக்கு வேறு வழியில் பெருமை சேர்க்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள அ.குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சோலைராஜ் தர்மராஜ் (29). ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே சோலைராஜின் ஆசை. 2013இல் 18 வயதானபோது, அந்த ஆசை நிறைவேறியது. ஆனால், 2018இல் உடல்நலன் பாதிக்கப்பட்ட சோலைராஜுக்கு, அறுவைசிகிச்சை மூலம் இடது கால் அகற்றப்பட்டது. அதன் பின்னர் 21ஆவது மெட்ராஸ் பிரிவில் அலுவலகப் பணிக்கு அவர் மாற்றப்பட்டார்.
நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்கிற தாகம் மட்டும் அவருக்குத் தீரவில்லை. சோர்ந்துவிடாமல், பாரா போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நீளம் தாண்டுதலில் பயிற்சி எடுத்து முன்னேறினார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற்றார்.
2023இல் சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிதான் சோலைராஜை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்தியா சார்பில் நீளம் தாண்டுதல் டி-64 பிரிவில் பங்கேற்று, 6.80 மீட்டர் தாண்டி, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.