

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளைத் திறம்படப் பயன் படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக 30 சதவீத விதிமுறை எனும் வழி முன்வைக்கப்படுவது தெரியுமா? மீண்டும்மீண்டும் ஒரே மாதிரி அமையக்கூடிய பணிகளில் 70 சதவீதச் செயல்களை ஏஐ வசம் ஒப்படைத்துவிட்டு, எஞ்சிய 30 சதவீதப் பணியை மனிதர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த விதி.
இந்த விதியை ஏஐ பயன்பாட்டுக்கான பொன்விதியாக அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது என்றாலும், ஒரே மாதிரியான வேலைகளை ஏஐ வசம் தயக்கம் இல்லாமல் ஒப்படைக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதை இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், அலுப்பூட்டக்கூடிய வேலைகளை எல்லாம் ஏஐ சேவைகளிடம் விட்டுவிடலாம் எனப் புரிந்துகொள்ளலாம். உண்மையிலேயே இது நடைமுறையில் அதிகப் பலன் தரக்கூடியது. ஏன், ஏஐ சேவைகளுக்கு அலுப்பே ஏற்படாதா எனக் கேட்கலாம். ஏஐ சேவைகளின் பலமே அதுதான்.
மனிதர்கள் போல அவை அலுப்புக் கொள்ளாது, களைப்பும் அடையாது. உதாரணமாக, ஆயிரக்கணக்கான சர்வே முடிவுகள் அடங்கிய பெரிய எக்ஸல் கோப்பை கொடுத்து, இதில் உள்ள பயனுள்ள அம்சங்களைச் சுட்டிக்காட்டவும் எனக் கேட்டால், இத்தனை பெரிய கோப்பா என்றெல்லாம் முகம் சுளிக்காமல் அடுத்த சில நொடிகளில், அதன் சாராம்சத்தைப் பட்டியல் போட்டுக் கொடுத்துவிடும்.