

பயண ஏற்பாட்டைப் போலவே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிதி ஆலோசனையிலும் ஏஐ சேவைகளின் தாக்கம் அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் பயண ஏற்பாட்டைப் போலவே, நிதி ஆலோசனை தொடர்பாகவும் ஏஐ சேவைகளைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை. சம்பாதித்தோமா, செலவு செய்தோமா என இருப்பதைவிட, வரவு செலவைத் திட்டமிட்டு மேற்கொள்வதே சேமிக்கவும், முதலீடு செய்யவும் ஏற்ற வழி. செல்வ வளத்தை உருவாக்கவும் இதுவே வழி.
செல்வ வளத்தைக்கூட விட்டு விடுங்கள். கடனில் மூழ்காமல் இருக்கவும், வருகிற பணம் எங்கோ போகிறது எனத் தெரியாமல் திண்டாடும் நிலையைத் தவிர்க்கவும் நிதி திட்டமிடல் அவசியம். இதற்கு நிதிநிலை தொடர்பான ஆழமான அலசல் தேவை. இந்த இடத்தில்தான் சாட்ஜிபிடி வருகிறது. மற்ற எல்லாவற்றுக்கும் ஏஐ சாட்பாட் சேவைகளை நாடுவது போலவே, நிதி விவகாரங்கள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்டால் சரியான பதில் மட்டுமல்ல, நிதி ஆலோசனைகளும் கிடைக்கும் எனப் பலரும் நம்புகின்றனர்.
ஏஐயிடம் ஆலோசனை: இவ்வளவு ஏன் அமெரிக்கப் பெண்மணி ஒருவர், சாட்ஜிபிடி உதவியோடு பத்து லட்சம் டாலர் கிரெடிட் கார்டு கடனை அடைத்ததாகத் தனது அனுபவத்தைச் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்துகொண்டிருந்தார். ஒரு மாத காலம் தனது வரவு செலவுக் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்ததாகவும், நிதிநிலை தொடர்பாகத் தான் கவனிக்காமல் விட்ட பல அம்சங்களை சாட்ஜிபிடி சுட்டிக்காட்டி வழிகாட்டியதாகவும் நேர்காணல்களில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நிதி விஷயங்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், ஏஐ சாட்பாட்களிடம் வழி கேட்கலாம் என்பது எளிதாக இருக்கிறது. அத்துடன், சாட்பாட்டிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல், கடன் சுமை அல்லது நிதி சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் பலர் நினைக்கின்றனர்.