

எதிர்காலத்தில் எல்லாரும் எழுத்தாளர் களாகி விட்டால் எப்படி இருக்கும்? சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளைப் பயன்படுத்தி எவரும் எளிதாகக் கதை, கட்டுரைகளை எழுதும் சாத்தியத்தை மனதில் கொண்டு செய்யப்படும் மிகையான கற்பனைக் கேள்வி இது. எல்லாரும் எழுத்தாளரானால், வாசகர்களுக்கு எங்கே போவது? இதுவும் மிகை கற்பனை கேள்விதான்.
என்றாலும், வாசகர்களே இல்லாத நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் என்று அச்சப்படுவதற்கான சூழலை ஏஐ துணை வாசிப்பு உருவாக்கிக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
சுருக்கம் வாசிப்பு: சாட்ஜிபிடியால் நமக்காக வாசித்து, சுருக்கத்தைத் தர முடியும் என்றால், எந்த ஒரு புத்தகத்தையும் நாம் ஏன் கஷ்டப்பட்டு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி, இந்த அச்சத்துக்கு அடித்தளமாக அமைவதைப் புரிந்துகொள்ளலாம். இக்கால தலைமுறையினர் மத்தியில் இந்தக் கேள்வி எதிரொலித்துக்கொண்டிருப்பதையும் உணரலாம்.
ஏஐ யுகத்தில் எந்தப் புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாட்ஜிபிடி அளிக்கும் புத்தகச் சுருக்கங்கள் மூலம், அதன் சாற்றைப் பிழிந்து புரிந்துகொண்டு விடலாம். கதை அல்லாத அபுனைவுகள் மட்டுமல்ல, நாவல்களையும் சாட்ஜிபிடி கொண்டு வாசித்து, கதைமாந்தர்களைப் புரிந்துகொள்ளலாம்.
கல்லூரி வளாகங்களில் இந்தப் போக்கின் தாக்கத்தை உணர முடிவதாகச் சொல்லப்படுகிறது. இலக்கிய வாசிப்புக்காகப் பரிந்துரைக்கப்படும் நாவல்களைகூட, மாணவர்கள் சாட்ஜிபிடி துணையோடு படித்து, பயிற்சிக்கான பதில்களை அளிக்கின்றனர். புத்தகச் சுருக்கச் சேவைகள் ஏற்கெனவே இருக்கின்றன என்றாலும், ஏஐ வாசிப்பு அதை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.